நவராத்திரி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்!


வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ரிபப்ளிக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் டெமாக்ரடிக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.   ஜோ பிடன் தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவழியினரான கமலா ஹாரிசை அறிவித்துள்ளார்.

ஒபாமா முன்பு அதிபராகப் பதவி வகித்த போது ஜோ பிடன் துணைப் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். கமலா ஹாரிஸ் முதல் இந்திய அமெரிக்கப் பெண் செனட் உறுப்பினராகத் தேர்வு பெற்று சாதனை  படைத்துள்ளார்.  வெள்ளையர் அல்லாத ஒரு பெண் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதும் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாகும்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஜோ பிடன் தனது டிவிட்டரில், “இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி இன்று தொடங்கி உள்ளது. நான் அமெரிக்கா மற்றும் உலகெங்கும் இதைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இறைவன் மீண்டும் கொடுமைகளுக்கு எதிராகவும் நல்ல ஒரு ஆரம்பத்துக்கு ஆதரவாகவும் இருப்பார் என நம்புகிறேன்” என வாழ்த்தி உள்ளார்.

கமலா ஹாரிஸ் தனது டிவிட்டரில், “எனது அமெரிக்க இந்து நண்பர்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், மற்றும் நவராத்திரியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. நமது இனத்தை மேம்படுத்தவும் அமெரிக்காவின் முன்னேற்றத்தை  அதிகரிக்கவும் இந்த விழா உதவட்டும்” என வாழ்த்தி உள்ளார்.

No comments