நிதி விவகாரமே தூக்கியடிக்க காரணம்: மணி

“என்னிடம் தவறில்லை. எனவே எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும் பார்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று கட்சிக்கான பதில் கடிதத்தில் குறிப்பிட்டேன்”

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பார் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“என்னிடம் 37 சாட்சிய ஆவணங்கள் இருக்கின்றது. விசாரணை நடத்துவதாயின் கட்சிக்கு அப்பால் நீதிபதிகளையோ அல்லது தகுதியான மூன்று பேர் கொண்ட குழுவையோ நியமிக்க வேண்டும் எனக் கோரினேன்.

ஆனால் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். என்னில் தவறில்லை என்பதால், எனக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததாலயே அவர்கள் விசாரணையை விரும்பவில்லை.

‘ஜனநாயக பண்பற்ற நிலை கட்சிக்குள் ஏற்படக்கூடாது என்று கட்சிக்குள்ளேயே ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களை எதிர்த்தேன். அவர்களுக்கு நான் முட்டுக் கட்டையாக இருப்பதே பிரச்சினை. இது 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பூதாகரமாகியது.

2010ம் ஆண்டில் கூட்டமைப்பில் இருந்து நாங்கள் விலகிய போது முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று, கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தான்தோன்றித் தனமாக செயற்படுகிறார் என்பதே. இவ்வாறான நிலையில் எமது அமைப்பு ஜனநாயக ரீதியாகச் செயற்படும் என கருதினோம்.

கட்சியை நிதி விவகாரங்களில் சீரான கட்டமைப்பில் வைத்திருக்க தேசிய அமைப்பாளர் என்ற முறையில் நிதி கட்டமைப்பை ஏற்படுத்தியதுமே என்னை விலக்குவதற்கு காரணமாக அமைந்தது. அதனை அவர்கள் விரும்பவில்லை. எனது தனிப்பட்ட நிதியை கட்சியின் கடனை செலுத்த வழங்கியுள்ளேன். எனது நேரத்தை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளேன்.

கட்சிக்குள் அதிகமானோரை கொண்டு வந்தால் தலைமைக்கு ஆபத்தாக அமையும் என்று பொ.கஜேந்திரகுமார் கூறினார். தனது தாத்தாவை, தந்தையை அப்படித்தான் தூக்கியெறிந்தார்கள் என்றார். ஆனால் அப்படி நிலைமை வராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கட்சியின் கட்டமைப்பை நானே உருவாக்கினேன். அதனை பொ.கஜேந்திரகுமாரும் ஏற்றார்.” – என்றார்.

No comments