உதவி நிதியை கனடாவில் சுருட்டிய பெண்மணி?


ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், கோபன்ட்மீ.கொம் (gofundme.com) மூலம், 82,882 டொலரை திரட்டினார்.

இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது.

அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீதுக்காக பலரால் சமூக ஊடகங்களில் விசாரிக்கப்பட்ட பின்னர், தேவாலயம் ஒன்றின் சமூகப் பிரிவான அல்பா ட்ரஸ்டுக்கு பணம் செலுத்தியதாக இஷினி வீரசிங் வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து, வீரசிங்க 20,000 கனேடிய டொலரை அல்பா அறக்கட்டளைக்கு 2019 ஜூன் மாதம் நன்கொடையாக வழங்கினார் என குறித்த ஃபோர்ஸ்கொயர் நற்செய்தி தேவாலயம் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க, குண்டுவெடிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிய மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் மற்றும் மற்றவர்களுடனும் தொடர்புகொள்வதற்கான பணியைத் தொடங்கினர்.

இருப்பினும் அரசாங்க நிறுவனங்கள், தொடர்புடைய பாதிக்கப்பட்ட தேவாலயங்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ப்ளூ-சிப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியை செய்துவருவதாகவும் நிதியை திருப்பி அனுப்புவதாகவும் குறித்த அல்பா ட்ரஸ்ட் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இஷினி வீரசிங்க, பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு உதவ திரட்டப்பட்டதாக கூறப்படும் அனைத்து நிதிகளையும் கோஃபண்ட்முக்கு திருப்பித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

No comments