முல்லை :பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிப்பு !


முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சண்முகம் தவசீலன்,கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிப்பிற்கு சென்றிருந்த வேளை  மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்றினால்  கடந்த 12 ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தார்கள்.


இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ள நிலையில்  இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று(16.10.2020) முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றின் நீதிபதி கௌரவ எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்ட தரணிகளான சிலர் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தனர் . குறிப்பாக இது இரண்டு நபர்கள் மீது மேற்கொள்ள பட்டுள்ள தாக்குதல் சம்பவம் எனவும் குறித்த ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரன் மீதான வழக்கு தொடர்பில் பழிவாங்கும் நோக்குடன் செய்தி சேகரிப்பதற்காக இரண்டு ஊடகர்களும் சந்தேக நபர்களின் இடத்துக்கு சென்ற நேரம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அத்துமீறி சந்தேக நபர்களின் வளவுக்குள் நுழைந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் எனவும் செய்தியாளர்கள் என அறிந்திருக்காத நிலையில் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் எனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் பிணைவழங்கி விடுதலை செய்யவேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் ஆயஜரான சிரேஷ்ட சட்டதரணிகளால்  வாதங்கள் முன்வைக்கபட்டது.

இந்த நிலையில் மனுதாரர்களான பாதிக்கபட்டுள்ள ஊடகவியலாளர்கள் சார்பில் ஆஜரான  சட்டதரணிகள் குழாம் தமது தரப்பு வாதங்களையும் மன்றுக்கு  எடுத்துரைத்தனர் குறிப்பாக இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் சமூகத்தில் ஒரு கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த வழக்கு விவகாரம் பொது நல விவகாரம் எனவே தனிப்பட்ட விவகாரங்களோடு இதை இணைத்து பார்க்க முடியாது அதற்க்கு எமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம். குறிப்பாக பொதுமக்களால் இந்த வழக்கு விசாரணைகள் கூர்ந்து கவனிக்க பட்டு வருகின்றது. இரண்டு ஊடகவியலாளர்களும் புலனாய்வு அறிக்கையிடலுக்காக பல நாட்களாக இந்த விவகாரம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்தவர்கள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் இந்த செய்தியில் கவனமெடுத்து முல்லைத்தீவில் கேள்விக்குளாக்கப்பட்டுவரும் வனவளம் தொடர்பில் செய்தியை அறிக்கையிட சென்ற சமயமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையில் பல ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. சரவதேச ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இலங்கையின் சட்டவாக்க துறையின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் மகஜர்கள்  அனுப்பி வைக்கபட்டுள்ளது . எனவே இந்த விவகாரம் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். இந்த இளம் ஊடகவியலாளர்கள் இருவரும் கடந்த ஆறுவருடங்களாக இந்த மாவட்டத்தில் பல்வேறுபட்ட மனித உரிமை சார் பிரச்சினைகளை செய்திகளாக வெளியிட்டு வருபவர்கள் இந்த மாவட்டத்தின் பல்வேறு சுற்றுசூழல் சார்ந்த செய்திகளை தேசிய அளவிலும் சர்வதேச வெளிகொண்டுவந்தவர்கள் எனவே இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்னும் இரண்டுபேர் கைது செய்யப்படவில்லை எனவே பிணை வழங்க ஆட்சேபனை தெரிவிக்கின்றோம். பிணை கிடைத்தால் சந்தேக நபர்களால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மற்றும் சந்தேக நபர்கள் வழக்கிலிருந்து தப்பி செல்ல நேரிடும் எனவே பிணை வழங்கும் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றோம் தமது வாதத்தினை கௌரவ  மன்றில் முன்வைத்தனர் .

பொலிஸ் தரப்பிலும் பிணை வழங்கும் விண்ணப்பத்துக்கான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பிணை வழங்கினால் சந்தேக நபர்களால் கைது செய்யப்படவேண்டிய ஏனைய இரண்டு பேரையும் கைது செய்ய தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் சந்தேக நபர்கள் தமது காணிக்குள் ஊடகவியலாளர்கள் இருவரும் அத்துமீறி நுழைந்தார்கள் என சொன்னால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 க்கு ஆவது அழைப்பெடுத்து  கூறியிருக்கவேண்டும் ஆனால் மாறாக தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே பிணை  வழங்க பொலிஸ் தரப்பில் ஆட்சேபனை  தெரிவிக்கின்றோம் என தெரிவித்தனர்.

அனைத்து  தரப்பு வாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதிபதி இரண்டு ஊடகவியலாளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரபலமான ஊடகவியலாளர்கள் எனற அடிப்படையிலும் சந்தேக நபர்கள் பிணையில் வந்தால் சாட்சிகள் அச்சுறுத்த படுவார்கள் என்றும் கைது செய்ய படவேண்டிய ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் தப்புவதற்காக வாய்ப்புகள் உண்டென கருதுவதாலும் பிணை விண்ணப்பத்தை கௌரவ மன்று நிராகரிக்கின்றது. அத்தோடு விளக்கமறியலில் இருக்கும் இரண்டு சந்தேக நபர்களினதும் விளக்கமறியலை எதிர்வரும் 20.10 வரை நீடித்து அன்றைய நாளுக்கு வழக்கை ஒத்திவைத்து கௌரவ மன்று கட்டளை பிறப்பித்தது.

 பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன்,பார்த்தீபன்,ருஜிக்கா ,துஸ்யந்தி ஆகிய சட்டவாளர்கள் சமூக நலனின் அடிப்படையில்  தாமாக முன்வந்து  நீதிமன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர். பாதிக்க பட்ட ஊடகவியலார்களின் சார்பில் ஆஜரான சட்ட தரணிகளின் வாதத்தால் சந்தேக நபர்கள் சார்பில் முன்வைக்கபட்ட பிணை விண்ணப்பம் கௌரவ மன்றினால் நிராகரிக்கப்பட்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது. 

No comments