ஜே.ஆரிடம் சிவா, ருத்ரா, சர்வா வசமாக சிக்குண்டதுபோல கோதாவிடம் சர்வேஸ்வரன்! பனங்காட்டான்

''1983 தமிழின அழிப்புக் காலத்தில் இலங்கையின் சட்ட மாஅதிபராகவிருந்த சிவா பசுபதியையும், பொலிஸ் மாஅதிபராகவிருந்த ருத்ரா ராஜசிங்கத்தையும், பிரதம நீதியரசராகவிருந்த சுப்பையா சர்வானந்தாவையும் தமிழர்கள் என்று கூறி அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமக்கான சாட்சியங்களாக இழுத்து தப்ப முனைந்தார். அதுபோல இன்றைய ஜனாதிபதி கோதபாயவின் புதிய அரசியலமைப்புக் குழுவில் சட்ட விரிவுரையாளர் கலாநிதி சர்வேஸ்வரன் தமிழர் பிரதிநிதியாக(?) அகப்பட்டுள்ளார்.''

இலங்கையில் சேகுவேரா ஆயுதப்புரட்சி இடம்பெற்ற 1971 ஏப்ரலில் இலங்கை இராணுவத்தில் இணைந்த கோதபாய ராஜபக்ச, 2009 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்திவிட்டு இருபதாண்டு ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர். 

லெப்டினன்ட் ஜெனரல் என்ற பதவிவழிப் பெயருடன் பல்வேறு பதக்கங்களும் பட்டயங்களும் சிங்கள அரசாங்கங்கள் இவருக்கு வழங்கி ஊக்கமளித்தன. பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகி முப்படைகளினதும் காவற்துறையினதும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பாகவிருந்தவர். 

கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி (மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள்) ஜனாதிபதியாகப் பதவியேற்று நேரடியாக அரசியலுள் புகுந்த கோதபாய, முதலாண்டு முடிவதற்குள் தமது உள்ளார்ந்த திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார். 

இதில் முக்கியமானவை இரண்டு. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு பதிலாக இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றுவது முதலாவது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது அடுத்தது. 

இருபதாவது திருத்தத்தின் கீழ் ஓரளவுக்கு சகல அதிகாரங்களும் அவர் வசமாகிறது. பிரதம நீதியரசர், காவற்துறை மாஅதிபர், சட்ட மாஅதிபர், நீதிபதிகள் நியமனங்கள் மட்டுமன்றி விரும்புகின்ற எந்த அமைச்சையும் இவர் தமதாக்கலாம். 

2011ல் மகிந்தவால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட சிரானி பண்டாரநாயக்க 2013 ஜனவரியில் எவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டாரென்பதையும், மகிந்தவின் நெருங்கிய  நண்பராகவிருந்த முன்னாள் சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் எவ்வாறு திடுதிப்பென பிரதம நீதியரசரானார் என்பதையும் மீளநினைவுக்குக் கொண்டு வந்தால், தலைக்கு மீறிய மலைபோன்ற அதிகாரம் ஒருவரை எவ்வாறு இயக்குமென்பதை புரிந்து கொள்ளலாம். 

மகிந்த ராணுவத்தில் கடமையாற்றியிராத போதிலும் (சிங்கள சினிமாப் படமொன்றில் இவர் ராணுவ அதிகாரி பாத்திரத்தில் நடித்தது சிலருக்கு ஞாபகமிருக்கலாம்) ஜனாதிபதி பதவிசார் அதிகாரங்களால் அவ்வாறே செயற்பட்டார். 

ஆனால், கோதபாய ராஜபக்ச ராணுவ அதிகாரியாகவிருந்து மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்து சர்வதேச அறிக்கைகளில் போர்க்குற்றவாளியாக பெயரிடப்பட்டவர். அவ்வாறான ஒருவர் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்தவாறு மேற்கொள்ளும் அல்லது குவிக்கும் அதிகாரங்கள் முழுமையான ராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கானது. இதனால் மகிந்த மட்டுமன்றி அவரது பிள்ளைகளும்கூட அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தப்படலாம். 

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிக்க ஒன்பது நிபுணர்கள்(?) குழுவொன்றை கோதபாய நியமித்துள்ளார். இவ்விடயத்தில் பிரதமரான தமது சகோதரரின் ஆலோசனையையோ அபிப்பிராயத்தையோ அவர் பெறவில்லையென்பது தெரியவந்துள்ளது. இக்குழுவில் ஜனாதிபதி வழக்கறிஞர்களான (முன்னைய ராணி வழக்கறிஞர்கள் - கியூ.சி) ஐந்து சிங்களவர் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக பேராசிரியர் மூவர், சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர்.

பேராசிரியர்களில் ஒருவர் முஸ்லிம் சமூகத்தவரான நசீமா கமார்தீன் என்ற பெண்மணி. சட்டத்துறை விரிவுரையாளரான கலாநிதி அருளானந்தம் சர்வேஸ்வரன் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு தமிழர். 

1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்க உருவாக்கிய அரசியலமைப்பும், 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய அரசியலமைப்பும் தமிழர் தரப்பின் சம்பந்தமோ, பங்களிப்போ, ஆதரவோ இன்றி நிறைவேற்றப்பட்டவை. அவ்வாறான குறை தமக்கு வரக்கூடாதென்று எண்ணியோ என்னவோ இக்குழுவில் தமிழர் ஒருவரை கோதபாய இணைத்துள்ளார். 

தமிழரான கலாநிதி சர்வேஸ்வரன் இக்குழுவில் இடம்பெறுவதால், தமிழர் தரப்பின் பிரதிநிதி ஒருவர் உத்தியோகபூர்வமாக இதில் அங்கம் வகிக்கிறாரென்று எடுத்துக்கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லையென்பதே இதற்கான பதில். 

தம்மை ஒரு துறைசார் நிபுணர் என்ற வகையிலேயே இக்குழுவில் நியமித்துள்ளதாக சர்வேஸ்வரனே கருத்து வெளியிட்டுள்ளதை இங்கு கவனிக்க வேண்டும். 

அதாவது, தமிழர் தரப்பின் பிரதிநிதியாக தாம் இக்குழுவில் இடம்பெறவில்லையென்ற இவரது கருத்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தம்மால் கவனிக்க முடியாதென்ற இவரது ஒப்புதல் வாக்குமூலமாகப் பார்;க்க வேண்டும்.

இவரை தமிழர்களின் பிரதிநிதியாக கோதபாய நியமித்துள்ளாரென்றால் இவர் முதலில் தமிழர்களால் தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அவர்களின் பிரதிநிதிகளுடன் (அரசதரப்பினர் அல்லாத) சந்திப்பு நடத்தி அவர்களின் கருத்தை பெறவேண்டும். 

பல்கலைக்கழகங்கள் சார்ந்த தமிழரான அறிவுஜீவிகளினதும் அவர்களது துறைசார் அமைப்புகளினதும் ஆலோசனைகளை உள்வாங்கும் தகுதியும் திறமையும் சுயமாக இயங்கும் ஆளுமையும் கொண்டவராக இவர் இருக்க வேண்டும். 

இதுவரை காலமும் தமிழினம்சார் அரசியல் மற்றும் அரசியலமைப்பு போன்ற விடயங்களில் சர்வேஸ்வரன் என்பவர் சமூகத்தில் தெரியப்படாத சட்டத்துறை நிபுணர். அவரே சொல்வதுபோல சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாய்ப்புச் சட்டம் போன்றவைகளில் இவர் சிறப்புத் தகைமை பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இத்துறையில் மூத்த விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். 

இதற்கு மேலாக இவரது பின்னணி, அரசியலமைப்பு ஆற்றல் என்பவை பற்றி இதுவரை எதுவும் தெரியவரவில்லை. 

இந்தப் பின்னணியில் கலாநிதி சர்வேஸ்வரனின் நியமனத்தை தமிழர் சார்பிலானது என்றோ, அவரைத் தமிழினத்தின் பிரதிநிதி என்றோ பார்க்க முடியாதுள்ளது. 

சட்டத்துறையில் அவர் அறிவுசாலியாக இருக்கலாம். நல்லதொரு விரிவுரையாளராக இருக்கலாம். பொதுவாழ்விலும், துறைசார் பணியிலும் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால், அரசியலமைப்புக் குழுவில் தமிழர் சமூகத்தின் பிரதிநிதியாக அதன் குரலாக அவர் இருக்க முடியுமா என்பதே இங்குள்ள கேள்வி. 

இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவிருந்தபோது வெளியிட்ட கருத்தை இங்கு சுட்டுவது சாலப்பொருத்தமானது. 

1983ல் இடம்பெற்ற தமிழின அழிப்பு அவரது ஆட்சிக்காலத்தின் செயற்பாடுகளில் உச்சமானது. அவரது அரசாங்கமும், அதில் அங்கம் வகித்த அமைச்சர்களும், அவர்களால் ஏவி விடப்பட்ட காடையர்களும், சிங்கள ராணுவமும் நடத்திய தமிழின அழிப்புக்கு சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட அவரே பொறுப்பு. 

ஆனால், அவர் தம்மை ஒரு தர்மி~;டராகக் காட்ட அன்றைய அரசாங்கத்தில் உயர் பதவி வகி;த்த மூன்று தமிழர்களை அரூப சாட்சிகளாக நிறுத்தினார். அவர்கள் நாட்டின் சட்டம், ஒழுங்கு, நீதி ஆகிய துறைகளுக்குப் பொறுப்பாகவிருந்தவர்கள். 

1983 தமிழின அழிப்புக் காலத்தில் சட்ட மாஅதிபராக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்தவர் சிவா பசுபதி. நீண்டகால சட்டத்துறை அனுபவம் கொண்டவர். 

பொலிஸ் மாஅதிபர் (ஐ.ஜி.பி) பதவி வகித்தவர் ருத்ரா இராஜசிங்கம் என்ற மூத்த அதிகாரி. பல அரசியல் கட்சித் தலைவர்களினதும் நன்மதிப்பைப் பெற்றவர். (அவ்வேளையில் மூத்த பிரதி பொலிஸ் மாஅதிபராக ஆர்.சுந்தரலிங்கம் இருந்தாரென்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.) 

பிரதம நீதியரசராகவிருந்தவர் சுப்பையா சர்வேந்திரா. இப்பதவியை வகித்த முதலாவது தமிழர் இவர். 

இவர்கள் மூவரும் அரசியல் ரீதியாகவோ, பின்கதவு வழியாகவோ நெறிமுறை தவறி இப்பதவிகளுக்கு வரவில்லை. சேவை மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் இப்பதவிகளைப் பெற்றவர்கள். 

1983 தமிழின அழிப்பின்போது தம்மீது பலரது விரலும் குரலும் நீட்டப்படுவதிலிருந்து தப்புவதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தன குள்ளத்தனமான வழியைக் கையாண்டார். 

'எனது அரசாங்கத்தில் சட்டம், ஒழுங்கு, நீதித்துறை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்களாக மூன்று தமிழர்கள் இருக்கும்போது நான் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட முடியும்" என்பதே ஜே.ஆர். அன்று முன்வைத்த வாதம். 

மேற்கூறப்பட்ட மூன்று தமிழரும் அரசியல்வாதிகள் அல்ல. அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களும் அல்ல. சில சந்தர்ப்பங்களில் - நெருக்கடியான வேளைகளில் இவர்கள் எவராவது வழங்கிய ஆலோசனைகளை ஆட்சித் தரப்பு ஏற்றதுமில்லை. ஆனால், இம்மூவரையும் பகடைக்காய்களாக்கி தம்மீதான இனவழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து தப்ப ஜே.ஆர். முனைந்தபோது இவர்கள் எதுவுமே கூறமுடியாது சூழ்நிலையின் கைதிகளாகவிருந்தனர்.

இந்த நிலைப்பாட்டையே கலாநிதி சர்வேஸ்வரனின் புதிய அரசியலமைப்புக் குழு நியமனத்திலும் பார்க்கலாம். கோதபாயவின் விருப்பத்துக்கான ராணுவ கட்டமைப்பை உருவாக்குவதே புதிய அரசியலமைப்பின் நோக்கம். மாகாண சபைகளை அமைக்க வழிகோலிய பதின்மூன்றாவது திருத்தம்கூட இதன்வழியே காணாமல் போகலாம். 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவான பதின்மூன்று நீர்;த்தும்போகும் வேளையில் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளாது முனகலாம். ஆனால், புதிய அரசியலமைப்பில் அதனை மெதுவாக வெளியேற்றிவிட்டால் - தமிழர் ஒருவரும் சேர்ந்தே புதிய அரசியலமைப்பை உருவாக்கினார் என்ற பாவமும் பழியும் கலாநிதி சர்வேஸ்வரன் சுமக்க நேரிடும். 

ஜே.ஆருக்கு 1983ல் மூன்று தமிழ் அதிகாரிகள் வசமாக அகப்பட்டதுபோல, கோதாவுக்கு இன்று சர்வேஸ்வரன் என்ற சட்ட விரிவுரையாளர் தமிழர் என்ற அடையாளத்தில் சிக்கியுள்ளார். 

செல்லும் செல்லாததற்கு ஒரு செட்டியார் வேண்டுமல்லவா?
No comments