கொரோனால் தெற்காசிய மக்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம்!! பிரித்தானிய ஆய்வு

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.

எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் நடந்த ஆய்வு ஒன்றில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் மற்றும் 260 மருத்துவமனைகள் பங்கு பெற்றன.

இந்த ஆய்வில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு 1,000 வெள்ளையின மக்களில் 290 பேர் இறக்கின்றனர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர் என தெரியவந்திருக்கிறது. வெள்ளை இனத்தவரோடு ஒப்பிடும்போது, மருத்துவமனையில் உள்ள தெற்காசிய இனத்தவரின் மரண வீதமும் தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களில் அனுமதிக்கபட்ட நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர். தடுப்பூசி போடுவதில் யார் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீர்மானிக்கும் போது இனத்தையும் இப்போது வயதையும் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவன் ஹாரிசன் கூறுகையில், ‘தெற்காசிய இனத்தவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது. இதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது.

எனவே தெற்காசிய மக்கள் அதாவது சிறுபான்மையின மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் கொரோனா வைரசிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல் மிகமிக அவசியம்’ என்றார்.

No comments