வெளியில் சிக்குண்டவர்களை மீட்க நடவடிக்கை தேவை?



கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டு அந்தப் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். இந்த நடவடிக்கை காரணமாக வடபகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தென்பகுதியில் தங்கியிருக்கும் நிலமை ஏற்பட்டிருக்கிறது.


இவ்வாறு தங்கியிருக்கும் வடபகுதியைச் சேர்ந்தவர்களை அப்பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்  மேலும் கூறியதாவது



கொரோனா தாக்கத்தை அடுத்து ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமையினால் தென்பகுதியில் வடபகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கனாவர்கள் மீண்டும் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.



இத்தகையவர்களை ஏதாவது ஒரு  வழிமுறையின் கீழ் சொந்த இடங்களுக்கு மீள அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கொரோனா தொற்றினை தடுப்பதற்காக மாவட்டத்துக்கு மாவட்டம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தென்பகுதியில் இவ்வாறு தங்கியுள்ளவர்களை பரிசோதனைகளின் பின்னாவது தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.



இவ்வாறு தங்கியுள்ள பலர் எம்முடன் தொடர்பு கொண்டதையடுத்து அந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

No comments