கடும் எதிர்ப்பினால் பதறியடித்து வெளியேறியது இராணுவம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்களுக்கு விடுப்பை முடித்து திரும்பும் படையினரை கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் தங்க வைத்து பரிசோதனை செய்யும் வசதி இல்லையென தெரிவித்து படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆயினும் இராணுவத்தால் கூறப்படும் போக்குவரத்து மையம் (Transit Centre) திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் புதிய கட்டடம் அல்லது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு மாற்றத் திட்டமிடப்படுவதாக தெரியவருகிறது.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு மாணவர் விடுதிகள் தனிமைப்படுத்தல் மையம் என சந்தேகிக்கப்படும் போக்குவரத்து மையமாக நேற்று மாலை மாற்றப்பட்டன. அத்துடன் இரவு முதல் படையினரை அங்கு அழைத்து வந்தனர்.

இது சந்தேகப்படுவது போல் தனிமைப்படுத்தல் மையம் இல்லை. முகாமுக்கு திரும்பும் படையினரை பரிசோதனை செய்து முகாம்களுக்கு அனுப்பும் போக்குவரத்து மையம் என்று இராணுவம் தெரிவித்திருந்தது.

எனினும் இராணுவத்தினரின் இந்த மையத்துக்கு தேசிய கல்வியற் கல்லூரியைச் சூழவுள்ள மக்களில் சிலரும் அரசியல் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதன்பின்னரே தமக்கு தேசிய கல்வியற் கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை எனத் தெரிவித்து இன்று (27) மாலை அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

No comments