உளவுத்துறைக்கு மண்டை கழுவ முயன்ற ஷஹ்ரான் பயங்கரவாதிகள்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிம் குழு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று திட்டமிட்ட முறையில் பொலிஸாரையும், புலனாய்வு துறையினரையும் நம்ப வைத்து பயங்கரவாதிகள் திசைதிருப்பினர் என்று பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற விசேட ஊடக மாநாட்டில் இதனை தெரிவித்தார். மேலும்,

ஆரம்ப விசாரணைகளில் ஷஹ்ரான் குழு தமக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு குழுக்களாக பிளவுபட்டு உள்ளதாகவும், அதில் ஒரு குழுவே கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நாங்கள் நம்பினோம். இப்போது சிஐடிக்கு தகவல் கிடைத்துள்ளது. தம்மை பற்றிய விசாரணைகள் தொடர்பாக திட்டமிட்ட முறையில் பொலிஸாரையும், புலனாய்வு துறையினரையும் நம்ப வைத்து பயங்கரவாதிகள் திசைதிருப்பினர்.

இஸ்லாத்தை தவறாக பிரசங்கித்து அதன்பால் முஸ்லிம் சமூக இளைஞர்களை பயங்கரவாதத்திற்காக கவர்ந்துள்ளனர். இதனூடாகவே தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டத்தரணி ஹெயாஸ் ஹிஸ்புல்லாவை தொழில் ரீதியாக செயற்பட்டமைக்காக கைது செய்யவில்லை. அவர் சட்டவிரோதமாக செயற்பட்டமை விசாரணைகளில் வெளிவந்துள்ளன. - என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் போது தெற்காசிய நாடொன்றில் தாக்குதல் ஒன்றினை நடாத்திய பின்னர், வெளிநாட்டில் உள்ள சில பயங்கரவாதிகள் இலங்கையை அவர்களது பாதுகாப்பு இல்லமாக பயன்படுத்த வைத்திருந்த இரகசிய திட்டங்கள் பலவும் அம்பலமாகியுள்ளது - எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments