தப்பிப்பிழைத்த வன்னி?


வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று நண்பகல் வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளாக 622 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 311 பேர் இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து இன்றுவரை ஒருவாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 311 பேரில் 235 பேர் கடற்படையினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல்  நிலையம் அமைப்பதற்கு  அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழ் அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றையதினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாம் தவிர்ந்த வெளியாட்கள் தொடர்ச்சியாக அங்கு அழைத்துவரப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளதாகத்  தெரிவித்து அயல் கிராம மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்றும்  மீன்பிடித்தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments