தாயகமெங்கும் தராகிக்கு நினைவேந்தல்!


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் அவர்களது 15வது நினைவேந்தல் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுhழ்ப்பாணம்,வவுனியா மற்றும் மட்டக்களப்பில் கொரொனா வைரஸ் மத்தியிலும்  ஊடகவியலாளர்களினால் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் தர்மரட்ணம் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது கொலையினை உளவுப்பிரிவுகளின் உத்தரவின் பேரில் புளொட் அமைப்பு முன்னெடுத்திருந்தது.

கொலையாளியாக அடையாளப்படுத்தப்பட்ட ஆர்.ஆர் எனப்படும் இராகவன் தற்போது கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள், மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்; நலம் பெற வேண்டியும் கொரோனோ தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.

No comments