கிம் ஜாங் கவலைக்கிடம்; தங்கையை ஏற்றுக்கொள்ள தயாராகும் வடகொரியா!

சர்வாதிகார ஆட்சியாக நடைபெறும் வடகொரியாவில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ்  எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற விவரம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு வெளி உலக தொடர்பு இல்லாத நிலையில் வடகொரியா உள்ளது.

தற்போது குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை கொண்ட வடகொரிய அதிபர் கிம்முக்கு கடந்த 12-ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் கிம் செய்துகொண்ட இதய அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இறுதியாக கடந்த 11-ம் தேதி அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய அதிபர் கிம் அதன்பின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. 

குறிப்பாக கடந்த 15-ம் தேதி மறைந்த வடகொரியாவின் முன்னாள் அதிபரும் கிம்மின் தாத்தாவுமான கிம் சங்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அரசு விழாவான இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிம் பங்கேற்கவில்லை. 

ஆண்டுதோறும் நடைபெறும் தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் கிம் இந்த ஆண்டு பங்கேறகாததும், அவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காததும் அமெரிக்காவின் உளவு அமைப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிம் ஜாங் உன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பின் தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவின் தனியார் செஜோங் நிறுவனத்தில் ஆய்வாளர் சியோங் சியோங்-சாங் கருத்துப்படி, கிம் உடல்நலப் பிரச்சினைகளால் ஓரங்கட்டப்பட்டாலும் வட கொரியாவில் ஒரு அரசியல் எழுச்சி சாத்தியமில்லை. கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஏற்கனவே அரசாங்கத்திற்குள் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தி வருவதாகவும், பியோங்யாங்கின் தலைமையின் பெரும்பாலான உறுப்பினர்கள் கிம் குடும்பத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக  சியோங் கூறினார்.
ஊடகங்கள் நுழைய முடியா இடமாக விளங்கும் வடகொரிய குறித்து அப்பப்போ ஊகங்கள் வெளியாகி வருவது வழமை கடந்த  2016 ஆம் ஆண்டில், தென் கொரியா ஊடகங்கள் உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, கிம் ஜாங் உன் ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு முன்னாள் இராணுவத் தலைவரை தூக்கிலிட்டதாகக் கூறினார்.

ஆனால் வட கொரியாவின் அரசு ஊடகங்கள் சில மாதங்களுக்குப் பிறகு ரி யோங் கில் உயிருடன் இருப்பதையும் புதிய மூத்த பதவிகளில் பணியாற்றுவதையும் காட்டியது எனவே தற்போது கிம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களும் பொய்யாக இருக்கலாமா என்று கருதப்படுகிறது.

No comments