விவசாயிகளை பாதுகாக்க அவசர கோரிக்கை?

































யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் உள்ளிட்ட உற்பத்திகளில் யாழ் மாவட்டத்தின் நுகர்ச்சிக்கு மேலதிகமானவற்றை யாழ் மாவட்டத்திற்கு வெளியே எடுத்துச்சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலரிடம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.



அவர் விடுத்துள்ள கோரிக்கையில் கொரோனாவின் தாக்கத்தினால் முடங்கியுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் உள்ளிட்ட பலர் மக்களை உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்குமாறும் அனைவரையும் தங்களது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்ளுமாறும் ஊக்கப்படுத்தி வருகின்றோம்.


இந்த நிலையில் உள்ளூர் விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் அவதியுறுவதுடன் யாழ் மாவட்ட மக்களின் நுகர்ச்சிக்கு மேலதிகமான உற்பத்திகளை வடக்கின் ஏனைய பகுதிகளுக்கோ அல்லது தென்பகுதிக்கோ எடுத்துச்செல்ல முடியாமல் மரக்கறி வகைகள் கால்நடைகளுக்கு போடப்படுவதுடன் தினமும் பெருந்தொகையான உற்பத்திகள் பழுதடைந்து விரயமாகி வருகின்றது.


யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ளமையினால் உள்ளூர் சந்தைகள் செயலிழந்துள்ள நிலையில் மாவட்டத்திற்கு வெளியே எடுத்து செல்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரு சிலருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு சில இடங்களில் அதுவும் குறைந்த விலையில் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்து வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இவர்களால் கொள்வனவு செய்யப்படாத உற்பத்திகள் அழுகி நாசமாகி வருகின்றது.


எனவே மாவட்ட செயலாளர் இவற்றை கருத்திற்கொண்டு விவசாய உற்பத்திகளை மாவட்டத்திற்கு வெளியே எடுத்து செல்வதற்கான அனுமதியினை மேலும் சிலருக்கு வழங்கி உற்பத்திகளை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யும் அதேவேளை உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி செயற்படுத்தவும் முன்வரவேண்டும். இவைகள் சாத்தியப்படாதவிடத்து சந்தைப்படுத்தல் வசதிகளின்றி நஷ்டமடையும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி அவர்களின் வறுமையை போக்கவேண்டும்.


தற்போது இவற்றை நாம் நடைமுறைப்படுத்த தவறின் விவசாயிகள் விரக்தியுற்று தமது விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதனால் நாம் அனைவரும்
வலியுறுத்திவரும் தற்சார்பு பொருளாதாரக் கோட்பாடு வலுவற்றுப்போய் எமது உணவிற்காக நாம் வேறு யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படலாம என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments