படைகளுக்கு அச்சுறுத்தல்; வட்சப் குழு பிடிபட்டது
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் வெளியில் செல்ல வேண்டாம் என அம்பாறை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் மத்தியமுகாம் கல்முனை பொலிஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, சிலர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானோரில் இளைஞர்களும் மாணவர்களும் உள்ளடங்குவதுடன் கூட்டம் கூட்டமாக மோட்டார் சைக்கிள்களில் பிரதான வீதிகளில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் விதமாக நடமாடியவர்களும் இவர்களில் அடங்குகின்றனர்.
இதேவேளை, சம்மாந்துறை பகுதியில் வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் வட்சப் குழு ஒன்றினை உருவாக்கி அதனை வழிநடத்தியதுடன் பாதுகாப்பு தரப்பினர்களின் நடமாட்டம் குறித்து ஏனைய குழு உறுப்பினர்களுக்கு தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment