பதுங்கிய ரவி வெளியே?


கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களை, இன்று (13) மாலை 4 மணிக்கு முன்னர், கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்று முன்னர் உத்தரவிட்டது.
இவ்வாறு மன்றில் முன்னிலையாகும் சந்தேகநபர்களுக்கு எதிராக, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாமென்றும், கோட்டை நீதவானுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு இன்று மாலை 4 மணிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகாத சந்தேகநபர்களை, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்த​ரவைச் செயற்படுத்த, சட்ட மா அதிபருக்கு சந்தர்ப்பமளிக்கப்படுவதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
தம்மைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவைச் செயலிழக்கச் செய்யுமாறு கோரி, ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேன்முறையீட்டு நீதியரசர்களான நவாஸ், ஷிரான் குணரத்ன, சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவால், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்த மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழு, இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை, இம்மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடிகள் தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

No comments