நாளையும் வேட்புமனுக்கள்?


பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நாடாளுமன்ற தேர்தலிற்கான தனது வேட்பு மனுவை  யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தாக்கல் செய்துள்ளது.தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்திற்கான வேட்பு மனுவை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் நாயகம் செல்வராசா கஜேந்திரன் சகிதம்; தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலிற்கான தனது யாழ்.மாவட்ட வேட்பு மனுவை தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தாக்கல் செய்துள்ளது.தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ,ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் மனைவி சகிதம் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன்  தலைமையில் கே.சுரேஸ் பிறேமச்சந்திரன்,மற்றும் கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்து தமது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

ஜக்கிய தேசியக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகெஸ்வரன்,சுதந்திரக்கட்சி சார்பில் அங்கயன் இராமநாதன் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்திருந்தன.

இன்று புதன்கிழமை மாலை வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திக் கட்சி ஆகிய கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை கையளித்திருந்தன.

No comments