யாழில் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம்


இலங்கை முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் பூட்டப்படாதிருந்த கடைகள் அனைத்தும் யாழ்ப்பாண காவல்துறை அணிகளால்  மூடப்பட்டுள்ளது.

இன்று  மாலை ஆறு மணி தொடக்கம் திங்கள் காலை ஆறு மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் , நோய் நிவாரண கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோரனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் இராணுவ முகாமில் அமைப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோர் இந்த நிலையத்தில் தங்க வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது என்றும் மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

No comments