அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை?


தென்னிலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 84 பேரினை ஆகக்குறைந்தது பிணையிலாவது தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு விடுவிக்க இலங்கை ஜனாதிபதி முன்வரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளது குடும்பங்கள் சார்பில் முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் இக்கோரிக்கையினை விடுத்திருந்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில் தற்போது 84 அரசியல் கைதிகள் ஆகக்குறைந்தது பத்துவருடங்கள் முதல் 20 வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கவும் அதிலிருந்து தப்பிக்கவும் இனம் மதம் தாண்டி அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300 சிறு தண்டனை கைதிகள் ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது புதிய கைதிகள் எந்தவித சோதனைகளுமின்றி சிறைகளில் கொண்டுவரப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.
அனுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் பாரிய குற்றச்செயல்களின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தற்போது சேர்த்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழல் அரசியல் கைதிகளிடமும் அவர்களது குடும்பங்களிடமும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அரசியல் கைதிகளை பிணையிலோ நிபந்தனை அடிப்படையிலோ குடும்பங்களுடன் இணைந்து வாழ ஜனாதிபதி அனுமதிக்கவேண்டுமென கோமகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments