கட்டையில் போகும் வரை கதிரையே கனவு?


கட்சி முக்கியஸ்தர்கள், மக்களது வேண்டுகோளுக்கு அமைய மீண்டும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், தேசியப்பட்டியலினூடாக நாடாளுமன்றம் செல்ல விரும்பவில்லை. பொலன்னறுவைக்கு பொறுப்பாக யாரும் இல்லை. இதனாலேயே இக்கோரிக்கையை ஏற்றேன்.
குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பித்துள்ளார்.
54ஆயிரம் கோடி நிதி பெற இதனூடாக திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தவே இவ்வாறு பணம் கோரப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் மேற்கொண்ட வீதி அபிவிருத்தி, பாடசாலை, வைத்தியசாலை என்பவற்றிற்றாக ரூபா 600கோடி செலுத்த வேண்டும்.
நான், ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஜனாதிபதியாக இருந்துவிட்டு எம்.பியாக வருவதற்கான நோக்கம் என்ன எனவும் என்னிடம் வினவுகின்றனர்.
என்னை மீண்டும் போட்டியிடுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது. சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பொலன்னறுவையில் எமது கட்சிக்கு 60 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களும் என்னைப் போட்டியிடுமாறே கோருகின்றனர்.
பொலன்னறுவையின் பொறுப்பை யாருக்கு வழங்குவது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால் என்னை மீண்டும் போட்டியிடுமாறு சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
தேசிய பட்டியிலில் வருமாறு சிலர் கேட்டாலும் நான் அதற்கு தயாரில்லை என்றார்.

No comments