கூட்டணி என்றுமே கூட்டமைப்பாகாது?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் போன்று மக்களை ஏமாற்றி மக்கள் விரோத செயற்பாடுகளை தமிழ் மக்கள் கூட்டணி முன்னெடுக்காது எனத் தெரிவித்தள்ள அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் மக்களுக்கு எதனைச் சொல்கிறோமோ அதனையே செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  செயலாளர் நாயகமாகக் கொண்ட அவர் வழிநடத்துகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் கூட்டணி இருக்கின்றது. எங்களுடைய அந்த அரசியல் கட்சி என்பது ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அதன் நடவடிக்கைகள் மீது வெறுப்புற்று அல்லது அதனை விமர்சித்து வெளியேறியவர்கள் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு  மக்களுக்கு சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று. குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவது ஒன்று பரப்புரையில் சொல்வது ஒன்று ஆனால் நடைமுறையில் வெவ்வேறான விசயங்களைத் தான் செய்தார்கள். அதாவது சொன்னதற்கும் செய்வதற்கும் சம்மந்தமில்லாத எதிரான விசயங்களைத் தான் செய்யத் தொடங்கினார்கள்.



அது தான் விக்கினேஸ்வரன் ஐயா கூட அந்தக் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணமாக அமைந்தது. ஆகவே நாங்கள் அந்த நிலைமையை மாற்றி மக்களுக்கு எதைச் சொன்னோமோ அதைச் செய்ய வேண்டும். வெளிப்படையாக செய்ய வேண்டும். மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்ற வகையில் தான் எங்களுடைய செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதைத் தான் மக்களிடத்தேயும் நாங்கள் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். அடுத்து வரும் தேர்தல்களிலும் இதைத் தான் நாங்கள் முன்வைக்கப் போகின்றோம். நிச்சயமாக அவர்கள் சொல்வதும் செய்வதும் வித்தியாசமாக இருக்கின்றது. ஆனால் நாங்கள் சொல்வதும் செய்வதும் ஒரே மாதிரியாக இருக்கும். குறிப்பாக நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதைத் தான் செய்வதாக இருக்கும். குறிப்பாக அதையே மக்களிடமும் எடுத்துச் செல்வோம். அந்தவகையில் எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.



No comments