நடைபிணம் கருணாவை தாக்கிய கோடீஸ்

தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் காட்டி கொடுக்கின்ற செயற்பாட்டை கருணா எனும் முரளிதரன் கைவிட வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தனது கருத்தை முன்வைத்தமை தொடர்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும்,

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கும் கருணா தமிழ் மக்களுக்கு  தான் திருந்தி விட்டதாக பாசாங்கு செய்து வேடமிட்டு இருப்பது மீண்டும் தமிழ் மக்களுக்கு புலனாகிவிட்டது. பாரத தேசத்தில் பல மொழிகள் காணப்படுகின்ற போதும் ஒரு முறையில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என கருணா சுட்டிக்காட்டி இருப்பது அவரது மடமை உணர்த்துகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து போராட்டத்தை குழிதோண்டிப் புதைத்த கருணா இப்போது தான் திருந்திவிட்டதாக மக்களுக்கு பாசாங்கு காட்டுகிறவராகத்தான் இருக்கின்றார். இந்திய தேசத்தில் பாடப்படுகிற தேசிய கீதமானது அங்கு வாழும் சிறுபான்மை மக்களது மொழியான வங்காள மொழியிலே பாடப்படுகிறது. இந்தியாவை ஒப்பிட்டு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பற்றி பேசும் அவர் அரசியல் ரீதியாக நிறைய விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசம் பல மாநில கொண்ட ஒரு நாடு அங்கு  அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்பட்டதோடு மாநில சுயாட்சி நிலவுகிறது. இலங்கையை பொறுத்தவரையில் எந்த ஒரு மாநில சுயாட்சியும் வழங்கப்படவில்லை.

அரச கரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதால் எந்தவித பிரச்சினையும் இல்லை மாறாக இன ஒற்றுமைதான் ஏற்படும். விமல் வீரவன்ச சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்கின்றார். அவருக்கும் கருணாவிற்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கின்ற நடை பிணம். தமிழ் தேசியத்தையும், தமிழ் மக்களையும் காட்டி கொடுக்கின்ற செயற்பாட்டை கருணா கைவிட வேண்டும். - என்றார்.

No comments