இறந்துவிட்டால் கொன்றது யார்? கோத்தாவிடம் தமிழ் கேட்கும் பெண்கள் அமைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மரணித்து விட்டனர் என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்தை கண்டிப்பதாக வட, கிழக்கில் செயற்படும் பெண்கள் நடவடிக்கை வலையமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். அதில் மேலும்,

2009-மே-18 அன்று அருட்தந்தை ஜோ. பிரான்ஸிசுடன் இப்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் 58வது படை பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டால், அவர்கள் எப்படி இறந்தார்கள்? அல்லது யார் கொன்றார்கள்? அவற்றின் எச்சங்கள் எங்கே? எத்தனை காலத்துக்கு உண்மை மௌமாக இருக்கப் போகிறது?.

கோத்தாபய ராஜபக்ச பயங்கரவாதிகளை தோற்கடித்துவிட்டதாக கூறிய பின்னரும் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் எங்கே?.

2019-நவம்பரில் ராஜித சேனாரத்ன நடத்திய ஊடக சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்களை கோத்தாபயவின் கீழ் முன்னெடுத்ததாக இருவர் ஒப்புக் கொண்டனர். தேர்தலில் கோத்தாபய வென்ற பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் இளைஞரான பலேந்திரன் மஹிந்தன் புனர்வாழ்வுக்காக அவரது தாயார் ஜெயகுமாரி பலேந்திரனால் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ள அவரது தாயார் ஒரு முன்னணி குரலாக இருந்தார். அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். - என பல கேள்விகளுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments