கோத்தா ஆட்சியில் புறக்கணித்தது கூட்டமைப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று (31) இடம்பெற்றது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியில் முதல்முறையாக குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு துணை தலைவர் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு புறக்கணித்திருந்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேரடியாக 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலில் ஓர் உறுப்பினருமாக மொத்தம் 8 பேர் உள்ள நிலையில், ஆளும் அரசின் முடிவுகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான காரணங்களிற்காக இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தை புறக்கணித்தனர். அதேபோன்று ஐ.தே.க மற்றும் ஈ.பி.டி.பியின் தலா ஒரு உறுப்பினரும் வெவ்வேறு காரணங்களிற்காக கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் துறைசார் முன்னேற்றங்கள், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

No comments