தீவக மீள்குடியேற்றம் மந்த கதியில்?


யாழ்.குடாநாட்டின் தீவகப்பகுதிகளில் மக்களது மீள்குடியேற்றம் எதிர்பார்த்த அளவில் இல்லாதிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு,  காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, ஊர்காவற்றுறை, மண்டைதீவு என்பன யாழ்ப்பாணத்தைச் சுற்றி அமைந்து உள்ள தீவுகள் ஆகும்.   

இவற்றில் வேலனை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, காரைநகர், மண்டைதீவு ஆகிய தீவுகளுக்கு தரைவழித் தொடர்புகள் உள்ளன.  

தீவகப் பகுதிகளில் நெடுந்தீவு, காரைநகர் என்பன தனிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. 'தீவகம் வடக்கு' என்ற பெயரில், எழுவைதீவு, அனலைதீவு என்பன ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துடனும் 'தீவகம் தெற்கு' என்ற பெயரில், புங்குடுதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் வேலனை பிரதேச செயலகத்துடனும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.  

இவ்வாறாக நெடுந்தீவு, காரைநகர், வேலனை, ஊர்காவற்றுறை என தீவகப்பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் யாழ். மாவட்டத்தில் உள்ளன.  

நெடுந்தீவில் 4,587 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 10,682 பேரும் வேலணைப் பிரிவில் 16,396 பேரும் ஊர்காவற்றுறை பிரிவில் 10,259 பேரும் என, இந்த நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 41,924 பேர் மொத்தமாக வாழ்ந்து வருகின்றனர்.  

கிராம சேவகப் பிரிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் ஜே-01 எனத் தொடங்குகின்ற பிரிவு, நெடுந்தீவு மேற்கு கிராம சேவகப் பிரிவையே குறிக்கின்றது. மொத்தமாக, ஜே-01 தொடக்கம் ஜே-48 வரை, 48 கிராம சேவகப் பிரிவுகளாகத் தீவகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.  

1990 இல் ஆரம்பித்த இரண்டாம் கட்ட ஈழப்போருடன், 1990களின் இறுதிக்காலம், 1991களின் ஆரம்பக்கால இடப்பெயர்வுகளுடன் தீவகம் வெறிச்சோடியது.  

முதற்கட்டமாக, அப்பகுதி மக்கள் யாழ். நகரை நோக்கி இடம்பெயர்ந்தனர். அதன் பின்னரான காலங்களில், ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகள் (1995) மற்றும் பிற காரணங்களால் வன்னி, கொழும்பு. வெளிநாடுகள் எனப் புலம்பெயர் அவல வாழ்வு தொடர்ந்தது.  

இவ்வாறாக, அன்று இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த பல தீவக மண்ணில், இன்று வெறும் 40,000 மக்கள் தொகையினரே வாழ்ந்து வருகின்றார்கள். தீவுப்பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த கணிசமானோர், புலம்பெயர்ந்த நாடுகளில், வாழ்ந்தும் வருகின்ற நிலையில் தீவக மீள்குடியேற்றம் மந்த கதியிலே இருந்துவருகின்றது.

No comments