எதுவாக நீ வருகிறாய் தைத்திருநாளே..!

மார்கழி பனிச்சிறை உடைத்து

பார்களி பொங்கி புதிதாய் பிறக்க


கார் வெண் சிரிப்பை மெல்லென உடுத்தி

தேரேறி பூவுலகம் பசுமையாய் விழித்திட

ஊர் கூடி உழவர் குலம் மகிழ்ந்திடவே

வருவாயோ தைத்திருநாளே!ஆடியில தேடிப் போட்ட விதை

ஆவி உயிர்த்து இங்கே எழுந்திருக்கு

தேடியும் கிடைக்காத இன்பம் இதை

கூடியும் குலவியும் களணியில் களைபறித்தோமே

வையகத்தின் வறுமை போக்கி செழுமை கொள்ள

வருவாயோ தைத்திருநாளே!காயெல்லாம் முற்றி கனியாகும்

கதிரெல்லாம் கலகலவெனச் சிரித்திடும்

தானியமும் கிழங்கும் அறுவடைக்காய் காத்திருக்கும்

முக்கனியும் எக்கனியும் கனிந்தே தேன் ஒழுகும்

உழவனின் அகமெல்லாம் நிறைவால் மகிழ

காளையும் கொழுத்தே ஏறு தழுவ

தைத்திருநாளே வருகமழைபொழிந்த ஈரம் சற்றே போக

பனியின் ஈரமுத்தம் சுற்றம் சூழ்ந்திட

எங்கள் குலப்பெண்கள்

வைகறையில் துயிலெழுந்து

தலைமுழுகி புத்தாடை புனைந்து

தரைமெழுகி மாக்கோலமிட

அழையா விருந்தளியாய் அணிவகுக்கும் நுண்ணுயிர்க்கும்

நன்னாளாய்

வருவாயோ தைத்திருநாளேகுலைவாழை மாவிலை தோரணம் கட்டி

செங்கரும்பை அதனருகே நட்டு

தலைவாழை இலையிலே நெல் பரப்பி

நிறைகுடத்தை நடு நடுவே வைத்து

முக்கனியோடு விளா மாதுளை பிளந்து வைக்க

நறுமணம் மூக்கில் நின்றே இனிக்க

வாராயோ தைத்திருநாளே!கனன்று எரியும் அடுப்பில் புதுப்பானை வைத்து

பசும்பால் பொங்கி விசும்பும் தீயில்

புத்தரிசியும் தானியமும் கிழங்குமிட்டு

பொங்கல் பொங்கி வெந்துவர

வெல்லமும் தேனும் நெய்யும் கலந்த இன்மணம் காற்றினில் கமழ

வாராயோ தைத்திருநாளே!ஆதவனின் வரவைக்கண்டு மலர்கள் மகிழ்ந்திட

வண்டினங்கள் மலர்ப்படுக்கையில் பண்ணிசைக்க

காலைப்பொழுதில் கதிரவனுக்கு நன்றி சொல்லி

சுற்றமும்  சூழ விருந்துண்டு மகிழ

வா தைத்திருநாளே!சொந்த நிலத்தில் இன்புற வாழ்ந்திடும் வரமாய் வருவாயோ

எந்தன் உறவுகள் யாவரும் கூடி வாழும் சுரமாய் வருவாயோ

போரின் வடுக்கள் நிரம்பிய வாழ்வை வசந்தமாக்க வருவாயோ

தேடியும் கிடைக்காத சொந்தங்கள்

நாடிவர வருவாயோ

தைத்திருநாளே!காணாமல் ஆக்கப்படோர் வாழ்வை

மீட்டுத்தர வாராயோ

கந்தக புகை தின்ற உறவுகளை பேணிட வழிகள் தாராயோ!

எம்மினத்தின் விடிவது சீக்கிரமாய் கனந்திட

எம்முன் வருவாயோ!

எதை எதை எல்லாம் தந்திட நீ வருகிறாய் தைத்திருநாளே...!ஞாரே.

No comments