ஈஸ்டர் தாக்குதல்: ராஜபக்சக்களது சதி!
அதிகாரத்தை இழந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக ஆளும் தரப்பின் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஒருபுறம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே அரசியல் பிளவை உருவாக்குவதன் மூலம் அவர்கள் அதை முயற்சித்தனர்.
அவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தினர், அதற்கான "புறநிலை சூழ்நிலை" 2013 ஆம் ஆண்டு தொடங்கி, உளவுத்துறை அமைப்புகளின் ஈடுபாட்டுடன் வடிவமைக்கப்பட்டது. புலனாய்வு அமைப்புகள் மூலம் சிங்கள மற்றும் முஸ்லிம் தீவிரவாத குழுக்களை உருவாக்கி பராமரிப்பதன் மூலம் அவர்கள் அதை 2013 இல் தொடங்கினர் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது 'பிள்ளையான்', மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்ததாகவும், விசாரணைகளின்படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து அவருக்குத் தெரியும் என்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதே கொலை தொடர்பாக மட்டக்களப்பு சிறையில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுடன் பிள்ளையான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
Post a Comment