Header Shelvazug

http://shelvazug.com/

ரணிலிடம் பெறமுடியாததை கோதாவிடம் பெறமுடியுமென கூட்டமைப்பு நம்புகிறதா? பனங்காட்டான்

நான்கரை வருடங்கள் கூட்டுக் குடும்பம் நடத்திய ரணிலிடம் பெறமுடியாதுபோன தமிழர்களுக்கான அரசியல் தீர்வை (சம்பந்தனுக்கான சொகுசு வீடு தவிர),
வெட்டொன்று துண்டிரண்டாக தமிழரைத் தூக்கி வீசி, பெரும்பான்மை - சிறுபான்மை பேசும் கோதபாயவிடம் பெறமுடியுமென்று கூட்டமைப்பு நம்புகிறதா? நெஞ்சைத் தொட்டு சொல்ல வேண்டும்!

பொதுவாக ஒரு நாட்டில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அதன் முதல் நூறு நாட்களை வைத்து அதனை மதிப்பீடு செய்வதும், விமர்சனம் செய்வதும் வழக்கம்.

ஆனால், கோதபாய ஆட்சியை ஒவ்வொரு வாரமும் மதிப்பீடு செய்யும் அளவுக்கு அதிரடியாகப் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதனால் தமிழர்களைவிட சிங்களவர்களே - அதாவது அவரை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள் பௌத்தர்களே இப்போது அதிர்ச்சியடைந்து காணப்படுகின்றனர். சிலர் நாட்டைவிட்டு ஓடவும் தொடங்கியுள்ளனர்.

அரசாங்க அலுவலகங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் ஊழல்கள், சுரண்டல், முறைகேடுகளைக் கண்டுபிடிக்க அதற்கென தனியானதொரு குழு பறக்கும் படையாகச் செயற்படும்.

ஆனால், இந்த வேலையை இப்போது கோதபாய தாமே செய்ய ஆரம்பித்துள்ளார். அரிசிக்குதங்கள், பொருட்கள் விற்பனை நிலையங்கள், மோட்டார் போக்குவரத்து அலுவலகங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கு திடீர் பாய்ச்சல் நடத்தி புதுப்புது உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்.

பல அதிகாரிகளை கையும் களவுமாகப் பிடித்து எச்சரிப்பதுடன், சிலரை உடனடியாக இடமாற்றமும் செய்கிறார்.

தம்மை ஆடம்பரமற்ற ஒரு ஆட்சித்தலைவராக காட்டுவதற்காக சாதாரண உடையில் தமது அலுவலகம் செல்கிறார். வெளிநாட்டுப் பிரமுகர்களைச் சந்திக்கும்போதும் அதே உடைதான்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றச் செல்லும்போது மட்டும், வெள்ளைக்காரத் தேசிய உடையில் (கோட் சூட் சகிதம்) சென்றார். சிங்களத் தேசிய உடையணிந்தால் மகிந்த பாணியில் குரக்கன் சால்வை அணிய வேண்டி வந்துவிடும் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கலாம்.

இராணுவத்தில் கடமையாற்றும்போதும், பாதுகாப்புச் செயலாளராகவிருந்தபோதும் இருந்த மனோபாவத்திலிருந்து தாம் மாறிவிட்டதாக பொதுமக்களுக்குக் காட்ட எத்தனிக்கும் முயற்சிகளே அதிரடிப் பாய்ச்சல்களும், அடக்கமான செயற்பாடுகளுமென நோக்கினும், அதன் பின்னாலுள்ள ஏதோவென்று இவைகளை நம்பவைக்க மறுக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக சஜித்தை ஆதரித்து பரப்புரை செய்த - அல்லது கோதபாயவை தாராளமாக விமர்சித்த முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர்.

வாகன விபத்துத் தொடர்பாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க கைதாகி பிணையில் விடுதலையானார். வெள்ளைவான் விவகாரம் தொடர்பாக ராஜித சேனரத்ன தேடப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுதலை பெற்றார். அனுமதியற்ற துப்பாக்கி வதை;திருந்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க (இவர் ஒரு நடிகரும்கூட) கைதாகி பிணையில் வெளியே வந்துள்ளார்.

அடுத்தடுத்து கைதாகப் போவதாக மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யுமாறு கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்களும் பிக்குகளும் பேரணி நடத்தியுள்ளனர்.

சட்டமும் ஒழுங்கும் நீதிபரிபாலனமும் ஷராஜஷ குடும்பத்தின் பொக்கற்றுக்குள் இருக்குமாயின் அவர்கள் விரும்பாத சகலருமே கைதாகலாம்.

நல்லாட்சிக் காலத்தில் மகிந்த குடும்பத்தின் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட காயத்துக்கு இப்போது வைத்தியம் செய்யப்படுகிறது போலும்.

இவையெல்லாவற்றுக்கும் பரிகாரம் காணுவதற்கு சட்டப்படியான சில நடவடிக்கைகளை கோதபாய ஆரம்பித்துள்ளார்.

1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்க புதிய அரசியலமைப்பை உருவாக்கியபோது சிலோன் என்ற இலங்கையின் ஆங்கிலப் பெயரை மும்மொழியிலும் சிறிலங்கா என மாற்றி, ஜனநாயக சோசலிச சிறிலங்கா குடியரசு என சிங்களப் பெயர் சூட்டி மகிழ்வடைந்தார்.

அதே அரசியலமைப்பில் தமக்குச் சாதகமான பல மாற்றங்களைச் செய்து, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை உருவாக்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தம்மைத்தாமே முதலாவது ஜனாதிபதியாக்கினார். இதற்கென தேர்தல் நடத்தி அவர் ஜனாதிபதியாகவில்லையென்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இப்போது ஜனாதிபதியாக வந்துள்ள கோதபாய தமக்கு விருப்;பத்துக்கேற்றவாறான, சிங்கள பௌத்த முதன்மை அரசமைப்பை உருவாக்க உத்தேசித்துள்ளார். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இப்போது இல்லாததால் புதிய உத்தியொன்றை கையாள்கிறார். ஷஜனநாயக இராணுவ குடியரசு| என்பது இதற்கான மறைபெயர்.

இதற்கான முதற்கதவு திறக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் பத்தொன்பதாம் திருத்தங்களை ஒட்டுமொத்தமாக துடைத்தழிக்க இவர் விரும்புகிறார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பதின்மூன்றாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலப்பிரசவம்தான் ஒன்பது மாகாண சபைகள். இச்பைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென பதின்மூன்றாம் திருத்தம் கூறுகிறது.

ஜனாதிபதியாகத் தெரிவான சில நாட்களுக்குள் இந்தியா சென்ற கோதபாயவிடம் பிரதமர் மோடி பதின்மூன்றாம் திருத்தத்தை விரைந்து அமுல்படுத்துமாறு கோரியபோது அதற்கு எந்தப் பதிலையும் கோதபாய அளிக்கவில்லை.

ஆனால், அங்கு நிற்கும்போதே இந்து பத்திரிகைக்கு அளித்த செவ்வியொன்றில், பெரும்பான்மை மக்கள் ஏற்காததையும், விரும்பாததையும் தம்மால் நிறைவேற்ற முடியாது என்று கூறி, பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல் செய்ய கையை விரித்தார்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன ராஜீவுடன் ஒப்பந்தம் செய்யும்போது பிரதமர் பிரேமதாச, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அத்துலத் முதலி மற்றும் ஜே.வி.பி. ஆகியோர் அதனை வன்மையாக எதிர்த்தனர். பிரேமதாச ஆதரவாளரான கடற்படைச் சிப்பாய் ஒருவர் ராஜீவை கொழும்பில் வைத்து தாக்கும் முயற்சியும் இடம்பெற்றது.

இவைகளை நினைவில் வைத்தே பெரும்பான்மை மக்கள் ஏற்காத என்ற சொற்பதத்தை கோதபாய பயன்படுத்துகிறார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் 1988 யூலையில் கைச்சாத்திடப்பட்டது. 1988 பெப்ரவரியில் அமெரிக்கத் தூதுவரான கல்பிரெய்த் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சந்தித்தபோது 'இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்வதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்" (ஐ றயள கழசஉநன iவெழ ய னநயட றiவா ஐனெயை) என்று ஜே.ஆர். தெரிவித்த தகவல் அமெரிக்காவில் ஆவணமாக இருப்பதை இந்து  பத்திரிகையே இந்த வாரம் பகிரங்கமாக்கியுள்ளது.

இதனூடாக வெளிக்கொணரப்படும் கருத்தானது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லையென்பது.

இப்படிப் பார்க்கின், பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்குவதற்கு கோதபாய எடுக்கும் முயற்சி சரியானது என்கின்ற கருத்து வெளிக்கொணரப்படுகின்றது. எந்தவொரு ஒப்பந்தமானாலும் நாட்டின் இறையாண்மைக்குப் பாதகம் ஏற்படுமாயின் அதனை நீக்கலாமென்று சிங்களத் தரப்பு சுட்டுகின்றது.

இதுபோன்றே, நல்லாட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறித்த பத்தொன்பதாவது திருத்தத்தையும் நீக்கும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது. தனிநபர் பிரேரணை ஒன்றும், இருபத்தியோராவது அரசியல் திருத்த சட்டமூலமும் இதனை நோக்கியவை.

இவை எந்தளவுக்கு வெற்றி பெறுமென்பதை அடுத்த சில மாதங்களுக்குப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கோதபாய நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுகிறது. கடந்த வார தமது கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி எதுவுமே கோதபாய குறிப்பிடவில்லை. அபிவிருத்தி என்பது மட்டுமே இவரது உரையின் மையப்பொருள்.

'சிங்கள மக்கள் வாக்கு உங்களுக்கானது. எங்கள் மக்கள் எங்களுக்கே வாக்களித்தனர். ஆதலால் எங்களுடனேயே பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்" என்று கூட்டமைப்பு கூறுகிறது. கோதபாயவுடன் பேச்சு நடத்த தயார் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் கூட்டமைப்பின் தோழமைக் கட்சியின் தலைவர் சித்தார்த்தன்.

விடுதலைப் புலிகளை அழிக்கும்போது கூறிய உறுதிமொழிகளை எல்லோரும் மறந்து எம்மை ஏமாற்றிவிட்டனர் என்று புராணம் பாடுகிறார் சம்பந்தன்.

புதிய அரசமைப்பு வரும் சாத்தியம் தெரியவில்லையென்று கூறும் சுமந்திரன், ரணில் அரசு தயாரித்த புதிய அரசியலமைப்பை அந்த இடத்திலிருந்து தொடருமாறு கோதபாய அரசிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவேன் என்று கோதபாய கூறியதாக சம்பந்தனை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதனை அதிகாரபூர்வமாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கவில்லை.

எட்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் மோடி சில நிமிடங்கள் சம்பந்தனுடன் பேசியபோது, இந்தியா வாருங்கள் பேசுவோம் என்று கூறிச் சென்றார்.

இன்றுவரை அது நடைபெறவில்லை. அப்படியான ஒன்றுதான் கோதபாயவின் அழைப்போ தெரியாது.

நான்கரை வருடங்கள் கூட்டுக் குடும்பம் நடத்திய ரணிலிடம் பெறமுடியாதுபோன தமிழர்களுக்கான அரசியல் தீர்வை (சம்பந்தனுக்கான சொகுசு வீடு தவிர), வெட்டொன்று துண்டிரண்டாக தமிழரைத் தூக்கி வீசி, பெரும்பான்மை - சிறுபான்மை பேசும் கோதபாயவிடம் பெறமுடியுமென்று கூட்டமைப்பு நம்புகிறதா? நெஞ்சைத் தொட்டு சொல்ல வேண்டும்!

No comments