உறவுகளும் நட்புகளும் கூட்டிணைந்த ராணுவ நல்லாட்சி! பனங்காட்டான்

ராணுவ ஆட்சி இல்லையென்று கூறும் கோதபாய ஆட்சியில் சிறையிலிருந்த ராணுவத்தினர் விடுதலையாகின்றனர். தூக்குத்
தண்டனை பெற்ற ராணுவத்தினர் வெளியே வருகின்றனர். தண்டனை பெற்ற படையினர் பதவியுயர்வு பெறுகின்றனர். அப்புவும் ஆச்சியும் அண்ணனும் தம்பியும் மச்சானும் மருமகனும் அரசியல் நியமனம் பெறுகின்றனர். அப்படியானால் இதனை "உறவுகளும் நட்புகளும் கூட்டிணைந்த இராணுவ நல்லாட்சி" என்று கூறலாமா?

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற ஒரு தேர்தலில்இ ஓரின மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியின் ஆட்சிஇ எவ்வாறு இராணுவ ஆட்சியாக மாறுமென்பதைத் தெரியவேண்டுமானால் இலங்கையைப் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றவேளை எவ்வகையான அச்சம் பலமட்ட மக்களிடம் இருந்ததோஇ அவை அப்படியே இப்பொழுது செயற்பாடாகத் தெரிகிறது.

இலங்கையில் ஒருபோதும் ராணுவ ஆட்சி ஏற்படாது என்று அடிக்கடி கூறிவரும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால்இ கொழும்பு அரசியல் வித்தியாசமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் ஊடகவியலாளர் ஒருவரின் கணக்கின்படி இதுவரை சுமார் 32 வரையான பிரதான உயர்பதவிகளுக்கு படைத்துறையினர் நியமனம் பெற்றுள்னனர். இவர்களுள் அநேகமானவர்கள் கோதபாயவின் ராணுவ பணிக்காலத்தில் அவரோடு கடமையாற்றியவர்களும்இ யுத்த காலத்தில் அவரின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர்களும் ஆவர்.

காலியாகவுள்ள முப்படைகளின் பிரதானிப் பதவியை தமது கூட்டாளியும் தற்போதைய ராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வாவுக்கு இவர் வழங்கியுள்ளார்.

இவரை கூட்டாளி என்று குறிப்பிடுவதன் அர்த்தமானது இருவரும் ராணுவத்தில் கஜபா  அணியைச் சேர்ந்தவர்கள் என்பதைவிடஇ ஜெனிவாவில் போர்க்குற்றவாளிகளென அடையாளம் காணப்பட்டவர்களென்பதைக் குறிப்பதாகும்.

ஓய்வு பெற்ற இன்னொரு ராணுவக் கட்டளை அதிகாரியை கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமிக்க இப்போது கண் வைத்துள்ளார்.

படைத்துறை அதிகாரிகளை வலமும் இடமும்இ முன்னும் பின்னுமாக நியமித்துவரும் இவர் மறுபுறத்தில் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் படையினரை தம் விருப்பப்படி எதேச்சாதிகாரமாக விடுதலை செய்து வருகிறார்.

தமிழர் தாயகத்தில் தென்மராட்சியிலுள்ள மிருசுவில் என்ற கிராமத்தில் 2000ம் ஆண்டில் எட்டுத் தமிழர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ சார்ஜன் சுனில் ரத்னாயக்காவுக்கு கோதபாய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் 1968ல் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த ஒன்பது பேர் 2000 டிசம்பர் 19ஆம் திகதி தாங்கள் குடியிருந்த வீடுகளைப் பார்க்கச் சென்றனர். இவர்களுள் ஒருவர் மறுநாள் அடிகாயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கைதான எட்டு ராணுவத்தினரில் ஒருவரான சார்ஜன் சுனில் ரத்னாயக்காவுக்கு 2015 யூன் 25ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது.

வெளியே எவருக்கும் தெரிவிக்காது கோதபாய கடந்த வாரம் இந்தக் குற்றவாளியை விடுதலை செய்தார். இந்தச் செயலுக்கு சர்வதேச ரீதியாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இவைகளை கவனத்தில் கொள்ளாத கோதபாயஇ படைத்துறையினரை பாதுகாப்பதற்கென புதிய சட்டமொன்றைக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

படைத்துறையினருக்கெதிராக எவராலும் எப்போதும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு அவர்களுக்கு சட்ட விதிவிலக்கு அளிப்பதே இதன் இலக்கு. தற்போது ஜனாதிபதிக்கு மட்டுமே அரசியல் யாப்பினூடாக இந்தச் சட்ட விதிவிலக்கு உண்டு.

இதனை நேரடியாகச் சொல்வதானால்இ இலங்கையில் எந்தப் படையினர் மீதும் எந்த வேளையிலும் என்ன குற்றத்துக்காகவும் யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது அதனைத் தடுப்பதே இதன் இலக்கு. ஒருவகையில் இது ராணுவ ரீதியான சர்வாதிகாரப் போக்காகவும் காணப்படுகிறது. முடியுமானால் இதன் வழியாக ஜெனிவாவைக் கையாளலாமெனவும் கோதபாய சிந்திக்கிறார் போலும்.

இதற்கு நிகராக இன்னொரு விடயம் வெளியில் சொல்லாமல் கொள்ளாமல் நடைபெற ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே கைதாகி இருந்தோர் கோதபாய ஆட்சியில் விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பின்னர் பதவி உயர்வும் வழங்கப்படுகிறது.

2008ம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் காணாமல்போன 11 இளைஞர்கள் வழக்கில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட போரில் முக்கிய பங்கெடுத்தவரான இவர் 1998ல் கடற்படையில் சேர்ந்தவர். பின்னர் ஒரு காலத்தில் கடற்படையின் பேச்சாளராகவும் பணிபுரிந்தவர்.

பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன வழக்கிலிருந்து இவரை விடுவித்துள்ள கோதபாய இப்போது இவருக்கு றியர் அட்மிரல் பதவியுயர்வும் வழங்கியுள்ளார்.

அதேபோன்றுஇ இங்கிலாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய ராணுவ அதிகாரியொருவருக்கும் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று கைகளால் சைகை காட்டிய பெர்னான்டோ என்பவரே அந்த ராணுவ அதிகாரி.

இவருக்கு இங்கிலாந்தின் நீதிமன்றமொன்று தண்டனையாக குற்றப்பணம் செலுத்த உத்தரவிட்டது. அந்தப் பணத்தை அவரைச் செலுத்தவிடாது இலங்கை அரசே பினாமி ஒருவர் மூலம் செலுத்தி அவரைக் காப்பாற்றி இலங்கைக்கு வர வைத்தது.

கொழும்பில் ராணுவ தலைமையகத்தில் பதவியுயர்வுடன் புதிய பதவியும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக சர்வதேசத்துக்கு கோதபாய நிர்வாகம் தெரியப்படுத்தும் செய்தி என்னவெனில்இ சிங்களப் படையினர் மீது எங்காவது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமானால் அவர்கள் தேசிய வீரர்களாக மதிக்கப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்படுவார்கள் என்பதாகும்.

ஆகஇ கோதபாய ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் நான்கு வகை செயற்பாடுகள் எந்த ஆரவாரமோ ஆர்ப்பாட்டமோ இன்றி மேற்கொள்ளப்படுகிறது.

முதலாவது - முக்கியமான உயர் பதவிகளுக்கு முன்னாள்இ இந்நாள் படைத்துறையினர் நியமனம்.
இரண்டாவது - ரணில் மைத்திரி ஆட்சிக்காலத்தில் சிறை வைக்கப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அல்லது தண்டனை பெற்ற ராணுவத்தினருக்கு விடுதலையுடனான பதவியுயர்வு.
மூன்றாவது - ஏதாவது நீதிமன்றமொன்றில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட படையினர் அக்குற்றத்திலி;ருந்து நீக்கப்பட்டு உடனடியாக உயர் பதவிகளுக்கு நியமனம். இதன்வழியாக தண்டனை வழங்கிய நீதிமன்றங்களின் முகத்தில் கரி அப்புவது.
நான்காவது - இனிமேல் எந்தவொரு படைத்தரப்பினர் மீதும் எந்தக்குற்றத்திற்காகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதவாறு அவர்களுக்கு சட்ட  விலக்களிக்கும் புதிய சட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது.

அடுத்துஇ அரசாங்க சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் உயர்மட்ட நியமனங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கும்இ நண்பர்கள் கூட்டத்துக்கும் வழங்கப்படும் முன்னுரிமை கவனத்தைப் பெறுகிறது.

அமைச்சர்கள் தங்களின் நிர்வாகத்தின் கீழ்வரும் எந்தப் பதவிகளையும் அவர்கள் விரும்பியவாறு நியமிக்க முடியாது கோதபாய தடுத்துவிட்டார். இந்த நியமனங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகுதியானவர்களைத் தெரிந்தெடுக்க உயர்மட்ட சபையொன்றையும் அவர் நியமித்தார்.

இச்சபையினூடாக இதுவரை நியமனம் பெற்ற சிலரை இங்கு குறிப்பிட்டால் கோதபாய அரசியலின் விண்ணாணம் தெரியவரும்.

மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவின் மனைவியின் தந்தையும்இ இளைய மகன் ரோகித ராஜபக்சவின் மனைவியின் தாயாரும் இலங்கை விமான போக்குவரத்துச் சபையில் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் லொஸ்ஏஞ்சல்சில் வசிக்கும் கோதபாயவின் நெருங்கிய சகாவான மால்ராஜ் டி சில்வா ஐக்கிய அரபுக் குடியரசின் தூதுவர் பதவிக்கு கோதபாயவின் சிபாரிசில் நியமனம் பெற்றுள்ளார். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் துணைத்தூதுவராகப் பதவி வகித்த இவர் மாதாந்தம் எண்ணாயிரம் அமெரிக்க டாலரை வீட்டு வாடகைக்குச் செலுத்திய விடயத்தில் நிதி மோசடி விசாரணைக் குழுவின் விசாரணையில் இருக்கின்ற போதிலும் இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் சட்டக்கல்லூரித் தோழரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான இவான் வனசுந்தர பிரான்சுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோதபாயவின் ஆத்ம நண்பரெனக் கூறப்படும் நளின் டி சில்வா மியன்மாருக்கான (பர்மா) தூதுவராக நியமனமாகியுள்ளார். இந்த நாட்டில்தான் பௌத்த பிக்குகளின் தர்பார் இடம்பெற்று வருகிறது.

கடந்த பத்து வருடங்களாக கோதபாயவின் தனிப்பட்ட போக்குவரத்து ஏஜென்டாகவிருந்த உபுல் பியதாச உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமனமாகியுள்ளார். அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் மூன்று டசின் வரையான குடும்ப நண்பர்களும் உறவினர்களும் முக்கியமான பதவிகளுக்குக் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004 - 2015 யுகம் மீண்டும் வந்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர்.

ராணுவ ஆட்சி இல்லையென்று கூறும் கோதபாய ஆட்சியில் சிறையிலிருந்த ராணுவத்தினர் விடுதலையாகின்றனர். தூக்குத் தண்டனை பெற்ற இராணுவத்தினர் வெளியே வருகின்றனர். தண்டனை பெற்ற படையினர் பதவியுயர்வு பெறுகின்றனர். அப்புவும் ஆச்சியும் அண்ணனும் தம்பியும் மச்சானும் மருமகனும் அரசியல் நியமனம் பெறுகின்றனர். அப்படியானால் இதனை உறவுகளும் நட்புகளும் கூட்டிணைந்த ராணுவ ஷநல்லாட்சி| என்று கூறலாமா?

No comments