இணைப்பாளரை கொலை செய்ய முயற்சியா?


வவுனியா காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் மூலம் அவரை கொலை செய்யவே முயற்சிகள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.குறிப்பாக தலையினை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

இதனை கண்டித்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜனநாயக போராட்டத்தை வன்முறையால் அழிக்க முடியாது,தாக்கியவர்களை கடவுள் தண்டிப்பார் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதனிடையே வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்க இணைப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது, வெறுமனே செய்தியே ஒழிய, உறுதியான தகவல்கள், ஆதாரங்கள் இல்லையென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தனது கட்சி ஆதரவாளர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராகத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் வவுனியா வாடி வீட்டில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.


No comments