ஆயுதம் மீட்பு; முன்னாள் போராளி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ரவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கல்மடு விநாயகபுரம் பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்த பொலிசாரின் விசாரனையில் மற்றுமொருவர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் திகிலிவெட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் 27 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் முன்னாள் போராளி என்றும் இவர்களுடன் தொடர்புபட்ட வேறு நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரனைகள் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

No comments