ரணிலுக்காக களமிறங்கிய சுமந்திரன்:சீற்றத்தில் ஏனைய பங்காளிகள்!


ஜக்கிய தேசியக்கட்சியில் ரணிலை காப்பாற்றும் வேலைத்திட்டத்திற்காக மீண்டும் எம்.ஏ.சுமந்திரன் முழு அளவில் களமிறங்கியுள்ளார்.

ஜக்கிய தேசியக்கட்சியின் தலைமை மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவைகள் தொடர்பில் சஜித் அணி , ரணில் அணியுடன் முட்டி மோதி வருகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் எந்நேரமும் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பங்காளி கட்சிகள் ஜக்கிய தேசியக்கட்சியின் உட்கட்சி மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து ஒன்றித்து அதனை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன.

இந்நிலையில் தற்போதைய சூழலில் எதிர்கட்சி தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்கி சுமூக நிலையை தோற்றுவிக்கும் கூட்டமொன்றை ரணிலுடன் நடத்த பங்காளி கட்சிகள் தீர்மானித்திருந்தன.

இதன் பிரகாரம் மனோகணேசன்,ஹக்கீம் உள்ளிட்ட தென்னிலங்கை பங்காளிக்கட்சிகளது பிரதிநிதிகள்  கடந்த வெள்ளி ரணிலை சந்தித்திருந்தனர்.
சந்திப்பிற்கு சென்ற அவர்கள் , அங்கு ஏற்கனவே வருகை தந்து பிரசன்னமாகியிருந்த எம்.ஏ.சுமந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் ஏற்கனவே வருகை தந்து காத்திருந்தமையினை கண்டு கேள்வி எழுப்பியிருந்தனர்.ஏனெனில் சுமந்திரனோ கூட்டமைப்பினரோ அச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.அத்துடன் தற்போது வரை அவர்கள் பங்காளிக்கட்சிகளாக இணைந்து இருக்கவுமில்லை.

இந்நிலையில் சுமந்திரன் அங்கு வருகை தந்திருந்தமை அதிர்ச்சியை வந்தவர்களிற்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சந்திப்பின் போது சஜித்திற்கு எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க ரணில் சம்மதித்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் பங்காளி கட்சிகளுடனான சந்திப்புக்களின் போது சுமந்திரனை வரவழைத்து வைத்திருந்த ரணிலின் நடவடிக்கைகள் அவர்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

No comments