குடியுரிமை திருத்தச் சட்டத்தை கிழித்தெறிந்த மாணவி!

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் , தமிழ்நாடு  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவு சட்டத்தை எதிர்த்து  கேரள மாணவி ரபீக்கா அப்துரகீம் தங்கப் பதக்கத்தை பெற மறுத்து  பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதுபோல் மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது  இதில்  எம்.ஏ. பட்டமும், பதக்கமும் பெற்ற பின்னர், மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி மேடையில்  வைத்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு  குடியுரிமை திருத்த சட்ட  நகலை எடுத்து அதை துண்டு துண்டாக கிழித்து எறிந்தார்.
புதிய சட்ட திருத்தம்,  குடிமக்கள் தங்கள் தேசியத்தை நிரூபிக்கச் சொல்வதால் துணைவேந்தர், சார்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அமர்ந்திருந்த மேடையில் குடியுரிமை சட்ட திருத்த  ஆவணத்தை கிழித்து எறிந்ததாக மாணவி கூறினார்.மேலும், இது குறித்து மாணவி கூறும்போது,
“ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எனக்கு  எந்த அவமரியாதையும் நடக்கவில்லை. எனக்கு பிடித்த நிறுவனத்தில் இந்த பட்டம் வழங்கப்பட்டதில் பெருமைப்படுகிறேன். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான எனது ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்ய நான் இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன். எனது நண்பர்கள்  விழா அரங்கின் வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்” என கூறினார்.
குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து அவரது நண்பர்கள் சிலர் துணைவேந்தரிடமிருந்து பட்டம் பெற மறுத்து விட்டதாக  மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி கூறினார். பட்டமளிப்பு  ஆடைகளை அணிந்தோம், ஆனால் எங்கள் பெயர்கள் அழைக்கப்பட்டபோது நாங்கள் மேடைக்குச் செல்லவில்லை. இது எங்கள் எதிர்ப்பு முறை” என்று அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக   ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

No comments