ஆழிப்பேரலை தந்த வலி ஊழி வரை தொடர்கிறதே..... - ஞாரே

காலை நேரம் ஆதவனின் வருகையின் ஆரவாரத்தில் உயிரினங்கள் தம் மகிழ்ச்சியை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கதிரவனின் கதிர்வீச்சில் பட்டுத்தெறிக்கும் ஒளிவீச்சோ கண்களை பறித்து கொள்ளை இன்பம் அள்ளித் தெளித்தது. இயற்கையின் அழகின் மற்றுமொரு பரிமாணமாக கடலன்னையின் அலைக்கரங்கள் பொன்னிறமான அந்த ஒளியில் முகம் நனைத்து உப்புக்காற்றில் தலை துவட்டி கரையினை முத்தமிட்டு திரும்பி செல்ல மனமின்றி செல்கின்றது.

இயற்கையின் எழிலை எழுதிட வார்த்தைகள் போதவில்லையே! அந்த அழகை மெருகூட்டுவதாக கரையோர கிராமங்களின் அழகும் தனித்துவமானவை தான். அதை அனுபவித்து பார்த்தால் அத்தனையும் இன்பமான தருணங்கள் தானே!

கரைவலை இழுக்கும் மீனவ உறவுகளின் மகிழ்வான பாட்டு ஒருபுறம், கரையேறும் தோணிகளை இழுக்கும் உறவுகளின் இசையோ மறுபுறம் என்றிருக்க மீன்களை களவாட வட்டமிடும் காகங்களின் கரைதலும், நாயின் குரைத்தலும் பூனையின் பதுக்கலுமாக அந்த கடற்கரை எல்லோருக்குமான பங்கை வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பாக பனைமரங்களும், தென்னைகளும் மற்றும் தாழைகளும் தம் அழகை சற்றே உப்புக்காற்றோடு உரசிவிட்டே சிரித்தன.

எல்லோரும் ஆனந்தமாயிருக்க ஒரு தாயின் ஏக்கப்பார்வை கடலன்னையை பலநூறு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன. யாருடை கண்பட்டதோ இல்ல அந்த கடவுளின் சாபமோ தெரியலியே...! சந்தோசம் கூடுகட்டி குடும்பம் நடத்திய ஒரு அன்பான தாயின் வாழ்வில் இடியென இறங்கியது அந்த ஈவீரக்கமற்ற நாள்.

கரையோர வாழ்வு கடலன்னையே அவர்களின் சொத்து, கடலனை வணங்கிய பின்பே தொழிலை ஆரம்பிப்பார் குமார். யார் வந்தாலும் சாப்பிட்டியாப்பா...! என்ன ஒரு மாதிரியாய் இருக்கிறாய்..? ஏதேனும் பிரச்சனையோ! என கேட்டு நலன் விசாரித்து உதவிடும் தங்க குணம் கொண்டவர். அதனால் என்ன சிக்கல் வந்தாலும் அந்த கிராம மக்கள் இவரையே நாடி தம் பிணக்குகளை தீர்த்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு கை சுத்தமான மனிதர்.

குமாரண்ண அப்படியென்றால் அவரின் மனைவி செண்பகமும் அதற்கு மேல் ஒரு படி சென்று வந்தாரையெல்லாம் விருந்தோம்பலில் மகிழ்ச்சியடையச் செய்வார். அப்படியான அருங்குணம். செல்வத்துக்கு பஞ்சமில்லை, ஒரேயொரு மகள் அகல், அவளே அவர்களுக்கு மட்டுமல்ல அந்த கடலுக்கு கடற்கன்னி, அக்கிராமத்தின் மக்களின் இளவரசி.

அகலிடம் முத்தமிழும் ஒன்றாய் குடிகொண்டிருக்கும். அங்கு எந்த கலைநிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அகலின் குரல்வண்ணம், நடனத்தின் நளினம், நாடகத்தின் பரிமாணம் என்பன பார்ப்போரை கவர்ந்திழுக்கும் அனைத்து தகுதியும் படைத்த பத்துவயது சிறுமியவள். எப்போதும் எதையாவது கேட்டும் வாசித்தும் ரசித்து மகிழ்வோடு துருதுருவென நடை பயிலும் வண்ணத்துப் பூச்சியிவள்.

குமாரின் பெருஞ்சொத்து அகல். அவளை ஒரு கணமும் பிரியாது பொத்தி பொத்தி வளர்த்து வந்தார். ஒரு பொழுது அவளை பிரியணும் என்றாலே துடிதுடித்துப் போயிடுவார் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாசத்தையும் அவளிடம் கொண்டிருந்தார்.

அகல் இரவில் தாய்மடியில் துயின்றாலும் தந்தையின் மார்பிலேயே விழித்தெழுவாள். எழுந்ததும் கடற்கரை சென்று நண்டுகள் கீறிய ஓவியங்களை ரசிப்பாள், கடலன்னை கரை வந்து திரும்புவதை மனசார மகிழ்வாள். தந்தையின் கூக்குரலோ தாயின் கண்டிப்போ அவள் இயற்கையை ரசிக்கும் போது இடையூறு செய்வதில்லை. இதற்காக அகலின் பெற்றோரும் அவளோடு காலையில் கடற்கரையில் உலவிச் செல்வது வழக்கமாயிற்று.

அப்பா ! இங்க வாப்பா ! இரண்டு நண்டுகள் என்னே அழகாக படம் வரைந்திரக்கு .. வந்து பாரப்பா... அகல் அழைக்க இதோ வருகிறேன் செல்லம் என அவரும் மெல்ல அகலை நோக்கி நடக்கலானாய். அவருக்கோ நண்டுகளின் தடங்களை விட தன் மகளின் பிஞ்சிப்பாதங்களின் நவீன சித்திரங்களை ரசித்தபடி மகளை நெருங்கி அள்ளி அணைத்து முத்தமிட்டு அளவற்ற ஆனந்தங் கொண்டார்.

தந்தையும் மகளும் செய்யும் குறும்புகளை தூரத்தே இருந்து ரசித்த செண்பகம் சற்று பொறாமை பட்டவளாக “ ம்ம் சரி சரி ... அப்பாவும் மகளும் கொஞ்சினது போதும் சீக்கிரமாக வாங்கோ.. எனக்கு நிறைய வேலை கிடக்கு...” என முணு முணுக்க.. அப்பா பார்த்தீர்களா அம்மாவின் கோபத்தை அம்மாவுக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கல... என்ற அதங்கம் என அப்பா... என ஏதோ சொல்லி முடித்து வீட்டை அடைந்தனர்.

மாலை நேர கடற்கரை காட்சியை நிலவொளியில் பார்த்து மகிழ்ந்த வண்ணம், “அப்பா ... யாரப்பா ... இத்தனை அழகையும் படைத்தவர்...” என தந்தையை கேட்டாள் அகல். “அதம்மா... எல்லாம் இயற்கையின் வரம்...! என்றார்

“அதோ ... அங்கே பார்த்தாயா நிலவொளியில் கடலன்னையின் அழகை.. இதை பார்ப்பதற்கு நமக்கு பெரும்பேறம்மா...! ஓம் .. அப்பா பார்க்க பார்க்க சலிக்காத அழகு... அதுவும் உங்களைப் போல ... என கூறியவாறு உறங்கலானாள் அகல். மகளின் பால் போன்ற முகவழகை ரசித்தபடி உறங்கியது குமாரின் குடும்பமும், அனைத்து உயிர்களும். ஆனால் இரவும் கடலும் தென்றல் காற்றும் உறங்க மறுத்து நடக்கவிருக்கும் துன்பமதை எதிரொலித்தன.

கறவைகளின் சத்தமும் பறவைகளின் இன்னிசையும் எங்கோ ஒரு கோயில் மணியின் ஓசையும் அகலின் உறக்கத்தை தட்டி எழுப்பி விட்டது. வழமை போல் கடலை நோக்கி நடக்கலாள் அகல். அகலைத் தேடி அவள் அப்பாவும், இருவருயும் தேடி செண்பகமும் என ஒரு நீண்ட தொடரணியாக சென்றனர்.

அன்று ஏனோ கடலன்னை வழமைக்கு மாறான முகத்தோடு குமாரின் கண்களுக்கு தென்பட்டாள். குமாரின் மனமும் ஏதோ ஒரு துன்பம் நிகழப்போவதை சொல்லிக் கொண்டே இருந்தது. மகளை கூட்டிக் கொண்டு விரைவாக வீடு செல்லவென அகலை தேடினார். அவளோ அன்று என்றுமில்லாத தொலைவில் நின்றிருந்தாள்.

“மகள் ... அகல் ... இங்கே வாங்கோ வீட்டுக்கு போவோம் “ என மகளை நெருங்கி சென்றார் குமார். திடீரென ஆர்பலித்த ஆழிப்பேரலை இருவரையும் நெருங்க விடாது பிரித்தது. அகலோ “ அப்பா ... அப்பா ... என அழ...” அவளை காப்பாற்ற தன்னுடைய முழுப்பலத்தையும் காட்டி நீந்தினார் குமார். கண்முன்னே தன் உயிர் பறிபோவதை எண்ணி போராடினார். இன்னுமொரு அலை அவரின் வேகத்தை தடைசெய்து மறித்தது.

அந்த அலையின் உச்சியில், பனைமரங்களுக்கு மேலாக அகல் த்த்தளித்தாள். அவளை காக்க முடியாது இவரும் மூச்சையானார். தந்தையும் மகளையும் தேடி செண்பகம் பெரும் பாதிப்புக்கள் அகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கரையோர கிராம்ம் எங்கும் ஆழிப்பேரலையில் கோரத்தாண்டவம் நிகழ்ந்திருந்தது. வீடுகள், கிணறுகள் மற்றும் மரங்கள் என்பன அழிந்ததோடு உயிரற்ற எண்ணிலடங்காத சடலங்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

சாதாரணமாக ஒரு மரணம் நிகழ்ந்தால் ஊரே கூடி அழுது தீர்க்கும். இன்றோ ஊரே மரண ஓலமாக இருக்க கூடி அழ யாருமின்றி ஓடியோடி உறவுகளை தேடித் தேடி களைத்து போய் பிணங்களோடு கதைத்தும் அழுதும் தீர்த்தனர் அக்கிராம மக்கள்.

கிராமத்துக்கே சோறு போட்ட மனிசர், இன்று கையில் ஏதுமின்றி மகளை பறிகொடுத்த நினைவுகளோடு சுயத்தை இழந்து இடிந்து போயிருந்தார். கண்முன்னே மகளை பறிகொடுத்தவர் மனைவியை கூட காணாது பரிதவித்து போனார்.

“ தம்பி... என் செண்பத்தை கண்டீர்களா...! என் மகளை கண்டீர்களா... ! என கண்களில் நீர் வழிய வழிய தேடி அலைந்து ஒருவாறு செண்பகத்தை கண்டுபிடித்தார். செண்பகமோ “ எங்கப்பா ... என்ர மகள் என ஒப்பாரி வைத்து அழ...” அவருக்கு இருந்த நிம்மதியும் சுக்கு நூறாய் உடைந்தது.

மகளை காணாத துயரம் வாட்டியது, மனதை தேற்றிய வண்ணம் எல்லா இடங்களிலும் தேடினார். தேடல் என்னவோ ஓய்ந்தபாடில்லை, அகலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சொந்த உறவுகளின் மரணத்தை கடந்தும், மகளின் ஏக்கம் உசிர பிடுங்கி வதைத்தது.

ஆழிப்பேரலை முகாம் அனைத்தையும் ஆழ ஊடுவி தேடியது நான்கு கண்களும், கண்களில் கண்ணீரை தவிர வேறேதும் நற்செய்தி இல்லாது தவித்தனர் குமாரும் செண்பகமும். இறுதியாக இருவரும் வேறு வேறு திசையில் தேடலை தொடங்க எண்ணி முடிவெடுத்தனர்.

கண்டவர்கள், தனக்கு பழக்கமானவர்கள் அனைவரிடமும் “ ஏன்பா என்ட மகளை உமக்கு தெரியும் தானே...”
“ஆமாம் அண்ணா..” என்றான் கரன். “ “மகளை எங்காவது கண்டியாப்பா.. “ இல்ல அண்ணா. “ நானும் தேடுறன் அண்ணா.. என்ட பொண்டாட்டி புள்ளையல கண்ட எனக்கு தெரிவியுங்கள் அண்ணா...” என கரனும் கேட்க, “ ஆமாப்பா கண்டதும் தகவல் தருகிறேன்” என தேடலை தொடங்கினார் குமார்.

செண்கமோ! அழுகை இயலாமை தாய்மை இவற்றை எல்லாம் தாங்கி மகள் அகலை தேடித் தேடி கலங்கிப் போனாள். எத்தனை கோயில்கள், முகாம்கள் யாவும் ஆராய்ந்து பார்த்தும் கிடைக்கவில்லை அவர்களது அரும்பெருஞ் சொத்து. ஆறுதலாய் கூட நல்ல செய்தி அவளது காதுகளை தொடவில்லை. ஏக்கத்தில் தூக்கத்தை மறந்தாள் இருண்டதை கூட அவளது உணர்வு அவளுக்கு சொல்லவில்லை.

“ ஏன் புள்ள ராசாத்தி... எப்படி இருக்கிற... என்ட மகளை கண்டியா புள்ள..” இல்ல அக்கா “என்னாச்சி செண்பகமக்கா..? என கேட்க செண்கமோ கண்ணீரின் கதையை சொல்லி முடித்தாள். ராசாத்தியோ பரிதாப்ப்பட்டவளாய் “ என்ட இரு பிள்ளைகளையும் தேடித்தான் போகிறேன்... வாங்க அக்கா சேர்ந்தே தேடுவோம் .. என இருவரும் தேடலாயினர்.

மறுநாட் காலையும் தேடலில் கால்கள் ஓடி ஓடி ஓய்ந்தன. மனதை சற்றே திடப்படுத்தியவளாக முகாம்களை விட்டகன்று உயிரற்ற உடல்களிடையே மகளை தேட தொடங்கினாள் செண்பகம். அதுவும் முடிவிலியில் முட்டி மோதி நிம்மதியை மட்டும் நிரந்தரமற்றதாக்கியது. இனி எல்லாம் இறைவன் செயல் என எண்ணியவளாக தன் கணவரைத் தேடி தாம் வாழ்ந்த அந்த பசுமையான கிராமத்தில் பழாய்ப்போன நினைவுகளோடு வந்து சேர்ந்தாள்.

குமாரின் விழிகளோ மகளை கண்டாயோ என ஏங்கித்தவித்தன.., செண்பகமும் அவ்வாறே ஏங்கினாள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுது தீர்த்தனர். துன்பத்தின் களைப்பில் மெய்மறந்து உறங்கிப் போயினர். ஏதோ கனவை கண்டவராய் விழித்தார் குமார். விடியலும் வினோதமாய் தான் புலர்ந்தது. ஆழப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் இறந்தவர்களை புதைத்தும், அழுதும் அந்த ஊர் முழுவதும் துன்பத்தின் சாரல் வீசியது.

எல்லோர் மனங்களும் வெறுமையை மட்டும் அள்ளிச் சேமித்தன. குமார் மட்டும் அந்த கடற்கரையை வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனக்கு தானே பேசிக்கொண்டு நடக்கலானார்.

“ மகளே ... அகல் என்ன கண்ணு செய்கிறாய்.. அப்பா கூப்பிட்டது கேட்கலையா..? என முணு முணுத்தார். மணல் மேடுகளில் சிறு நண்டுகள் கீறிச்சென்ற கீறல்களிடையே, தன் மகளின் கால் தடங்களை தேடி புறப்பட்டார். இந்திகழ்வு நீண்ட நெடிய பயணமாகி போனது. ஒவ்வொரு நாட் காலை விடியலிலும் இது சாதாரணமாய் நிகழும். வருடங்கள் ஓடிய போதும், அவர் மனதில் மட்டும் மாறுதல் ஏனோ குடிபுகவில்லை.

இறுதியாக எங்கு மகளை ஆழிப்பேரலை அள்ளிக் கொண்டு போனதோ அதுவரை அவர் செல்வதும், அந்த உயர்ந்த பனைமரத்தை உற்று உற்று பார்ப்பதும், தன் மகள் அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடையில் அவளை ரசிப்பதுமாக காலம் கழிந்தாலும். ஒரு நாள் அவ்வாறே அந்த நிகழ்வு மதியம் தாண்டியும் முடியவில்லை. போனவரை காணாது செண்பகமும், அவரது சகாக்களும் அந்த இடத்தை நோக்கி சென்று “ குமார் அண்ண... அண்ண எழும்புங்க ... செண்பகமக்கா உங்கள வரட்டுமாம்..” என உடலை அசைத்தனர். உணவற்ற உடலும், உசிரற்ற மெய்யும் அம்மண்ணில் சரிந்தன.

மகளின் பிரிவுத்துயரம் அவரை மெல்ல மெல்ல அரித்தே கொன்றுவிட்டது. செண்பகமோ செய்வதறியாது ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழப்பழகிக் கொண்டார். தேவாலயத்தில் தொண்டு செய்வதும், ஆசை மகளின் ஞாபகம் வந்ததும் இந்த கடற்கரையில் பொழுதை கழிப்பதுமாக காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்.

அதோ அந்த நண்டின் கீறல்களிடையே அகலின் கால்தடத்தை ரசித்தவண்ணம் இன்னும் தன் மகளின் ஞாபகச் சிதறல்களோடும், அவளின் ஆயகலை அறுபத்தி நான்கின் சிணுங்கல்களோடும் செண்பகம் கடலையில் ஓசையில் அவளின் காற் சதங்கைகளின் நர்த்தனத்தை ரசித்தபடி நகர்த்துகிறார் தன் வாழ்வை.

ஆழிப்பேரலை தந்த வலியை ஊழி வரை மறக்காது வாழும் சராசரி வாழ்வை வாழும் ஒரு சீவனாக செண்பகம் தன் ஆயுளை கரைத்துக் கொண்டிருக்கிறாள்.

முற்று

ஞாரே.

(சுனாமி தந்த வலி சுமந்த சிறுகதை - ஞா. ரேணுகாசன்)

No comments