ஈழத்தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை!

தமிழகத்தில் நீண்டகாலமாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்றும் பாட்டளிமக்கள் கட்சி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைத்து வசதிகளுடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்குத் திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமாக இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர்.
அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத் தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால்தான் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.
ஈழத் தமிழர்கள் தங்களின் சொந்த நாட்டுக் குடியுரிமையை இழக்காமல் தமிழகத்தில் கண்ணியத்துடனும், மதிப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய சிறந்த வழி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான். இலங்கையைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களின் இலங்கை குடியுரிமை தானாக ரத்தாகி விடும்.
அதற்கு வசதியாக, இலங்கை அரசுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens -NRC) திட்டத்தை செயல்படுத்தக்கூடாது
உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens -NRC) திட்டம் இந்தியா முழுவதும் நீட்டிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (National Population Register -NPR) மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதே தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிப்பதற்கான முன்னோட்டம்தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் ஐயங்கள் அனைத்தும் போக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு பிற நாடுகளுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலம் அல்ல. அதனால் பிறநாட்டு மக்கள் தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஈழத் தமிழர்கள் அனைவரின் விவரங்களும் அரசிடம் உள்ளன. இதனால், தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தேவை இல்லை.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரித்தால் அது தமிழக மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்று பாமக பொதுக்குழு கூட்டம் கோருகிறது.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments