இராணுவ ஆட்சிக்கு இடமில்லை என்றால் இராணுவத்தினரின் ஆட்சிக்கு என்ன பெயர்? பனங்காட்டான்

இலங்கையின் பெரும்பான்மை இன மக்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விசயங்களை சிறுபான்மையினர் செய்யக்கூடாது.
அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் பெரும்பான்மைச் சமூகம் எதிர்வினையாற்றும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கோதபாய மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆட்சிக்கு வந்த முதல் பத்து நாட்களுக்குள் வந்த முதலாவது எச்சரிக்கை இது. வெள்ளை வானும் வெளியே புறப்பட்டு விட்டதல்லவா? ''நந்திக்கடல்'' புகழ் கமல் குணரட்ண சொன்ன இராணுவ ஆட்சிக்கு இடமில்லை என்பதானதை, இராணுவத்தினரின் ஆட்சிக்கு இடமில்லை என்று எவ்வாறு கருத முடியும்?


பொதுவாக ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அல்லது ஆட்சியாளர் மாற்றம் ஏற்பட்டால், அதன் முதல் நூறு நாட்களை முக்கியமான ஒரு காலகட்டமாக பார்ப்பது வழக்கம்.

அரசியல் போக்கை நாடிபிடித்துப் பார்க்கும் காலமென இதனைக் கூறுவர். இலங்கை அரசியலைப் பொறுத்தவரை புதிய ஜனாதிபதியுள்ள கோதபாயவின் ஆட்சிமுறையை ஒவ்வொரு பத்து நாட்களுக்குமாகப் பார்க்க வேண்டும்போல தெரிகிறது.

தனது மூத்த சகோதரர் மகிந்தவின் பிறந்த நாளான நவம்பர் 18ஆம் திகதியை தமது பதவியேற்பு நாளாக இவர் எடுத்திருந்தார். அன்று எல்லாம் சுமுகமாகவே இடம்பெற்றிருந்தன.

ஆனால், அன்றைய அவரது உரையின் உட்கருத்தும் அவரது ஆடைகளின் தோற்றமும் அவரின் குடும்பத் தோற்றத்தில் பெரும் மாற்றத்தைக் காட்டியது. தந்தை டி.ஏ. ராஜபக்ச வழியாக வந்த சகோதரர்கள் சமல், மகிந்த, பசில் மற்றும் பெறாமகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் அணியும் குரக்கன் சால்வையை கோதபாய அணியவில்லை.

பதவியேற்புக்கான பரிசாக குரக்கன் சால்வையை மகிந்த வழங்கியபோதிலும் அதை கோதபாய புறக்கணித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னைய ஜனாதிபதிகள் (சந்திரிகா தவிர) அனைவரும் வெள்ளை வேட்டியும், வெள்ளை நிற நா~னல் சேட்டும் அணிந்தே பதவியேற்றனர். அதனையும் கோதபாய ஒதுக்கிவிட்டார். மாறாக, நீளக் காற்சட்டையும், அரைக்கை சேட்டும் அணிந்து பதவியேற்றதுமன்றி அவ்வகை ஆடையுடனேயே சகல வைபவங்களிலும் காட்சி தருகிறார்.

பதவியேற்பின்போது ஒருவகை இறுமாப்புடன் 'எனது போக்கில் நான் இயங்குவேன்" என்ற தோரணையில் அவர் உரையாற்றும்போது மேடையிலிருந்து மகிந்தவின் முகத்தில் கறுப்பு ரேகைகள் மின்னலடித்தன.

அடுத்தடுத்து அதிரடியாக இவரால் விடுக்கப்பட்ட அறிவித்தல்கள், இந்த ஆள் கொஞ்சம் வித்தியாசமாக ஆட்சி புரியும்போல தெரிகிறது என்று நம்பிக்கையும் - நம்பிக்கையீனமும் கலந்த எண்ணவோட்டத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

படைத்தளங்கள் உட்பட எந்த அரச அலுவலகத்திலும் எந்தவொரு அரசியல் தலைவரதும் படம் தொங்கவிடக்கூடாது என்பது இவரது முதல் உத்தரவு. (ஜெயவர்த்தன, சிறிமாவோ, பிரேமதாச, சந்திரிகா, மைத்திரியின் படங்கள் மட்டுமன்றி மகிந்தவின் படத்தையும் அப்புறப்படுத்த விடுக்கப்பட்ட அறிவிப்பு இது).

ஜனாதிபதி மாளிகை, அரசாங்க இல்லம் போன்றவைகள் தமக்கு வேண்டாமென்று அறிவித்தார். (சிலவேளை அந்தக் கட்டிடங்களில் யாராவது ஏதாவது வெடிக்கும் பொருட்களை வைத்திருக்கலாமென்ற அச்சமாக இருக்கலாம்).

ஜனாதிபதி செயலக பணியாளர்களை இரண்டாயிரம் வரையாகக் குறைத்தார். (முன்னைய ஆட்சியாளர்கள் வைத்திருந்த எண்ணிக்கையை மறைமுகமாக மக்களுக்குக் காட்டிக்கொடுக்கும் ஒரு முயற்சி இது).

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்த 900 வரையான பொலிசாரை மீண்டும் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற வெளியேற்றினார். (இப்போது அவரது நம்பிக்கைக்குரிய முப்படைகள்தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் என்பது வெளியே தெரியவராது - இவர் முன்னாள் இராணுவ அதிகாரியல்லவா?)

இடைக்கால அரசுக்கென (அடுத்த மே மாதம் வரைக்கும்) 16 அமைச்சர்களை நியமித்தார். இதில் டக்ளஸ் தேவானந்தாவும், ஆறுமுகம் தொண்டமானும் தமிழர்கள். முஸ்லிம்கள் எவருக்கும் இடமில்லை. (ஆனால், புலனாய்வுத்துறை அதிகாரிப் பதவி ஒரு முஸ்லிமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு மும்மொழிகளும் பாயாசம்போல)

தொடர்ந்து 35 ராஜாங்க அமைச்சர்களையும் 3 பிரதி அமைச்சர்களையும் நியமித்தார். இவர்களுக்குரிய பணியை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சரியான முறையில் ஒதுக்கிக் கொடுக்க வேண்டுமென இராணுவ பாணியில் ஷவேண்டுகோள்| விடுத்தார்.

அடுத்த சில மணிநேரங்களுக்குள் அந்த 3 பிரதி அமைச்சர்களும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இது ஒருவகை இராணுவத்தாக்குதல் போன்றது.

16 அமைச்சர்கள் பட்டியலை முதலில் பகிரங்கப்படுத்தியபோது மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சுகளும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், அடுத்து வந்த அறிவித்தலில் அவை இரண்டும் நீக்கப்பட்டு நிதி அமைச்சு, பௌத்த சாசன அமைச்சு உட்பட வேறு சில சில்லறை அமைச்சுகள் வழங்கப்பட்டன. (முப்படைகள் மற்றும் பொலிஸ் சம்பந்தமான அமைச்சுகளை அண்ணனிடம் வழங்க கோதபாயவுக்கு ஏனோ விருப்பமில்லை. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான அரசியலிலே என்று பாடலாமா?)

16 அமைச்சர்களில் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான பவித்திரா வன்னியாராய்ச்சி மட்டுமே ஒரேயொரு பெண்மணி. ராஜாங்க அமைச்சர்கள் 38 பேரில் ஒரு பெண்கூட இல்லை.

'எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி வாக்களிக்காதவர்களையும் சமமாக ஏற்று பணிபுரிவேன்" என்று பதவியேற்பின்போது கூறியவரின் கண்களில் ஒரு முஸ்லிம்கூட கிடைக்கவில்லையா? (சிலவேளை அடுத்தடுத்த வாரங்களில் அடுத்தடுத்து அமைச்சரவை மாற்றங்கள் ஏற்படக்கூடும்)

அங்கஜனுக்கும் வியாளேந்திரனுக்கும் முறையே யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. (தேர்தல் காலத்தில் வாக்குச் சேகரித்துக் கொடுக்காததற்கான பதவி என்று சொல்லலாமா?)

6 மாகாணங்களுக்கு ஆளுனர்களை நியமித்தது போன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு நியமிக்க முடியாத நிலைமை கோதாவுக்கு. திஸ்ஸ விதாரணவுக்கு ஒரு மாகாணம் உறுதியாகிவிட்டதாம். வடமாகாணத்துக்கு யார்? கிரிக்கெட் முரளிதரன் என்ற செய்தி தாறுமாறாக அடிபடுகிறது.

மலையகத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் வசதியான குடும்பத்தில் திருமணம் செய்தவர். இவரை இப்பதவிக்கு நியமிக்குமாறு இந்தியா கோதபாயவை நெருக்குவதாக ஊடகங்கள் கூறின. அவர் நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் சில செய்திகள். இல்லை, அவர் நியமிக்கப்படவில்லையென வேறுபக்கச் செய்திகள். இந்தியா செல்வதற்கு முன்னர் (இப்போது கோதபாய இந்தியா சென்றுவிட்டார்) முரளிதரனை வடமாகாண ஆளுனராக நியமித்துவிட்டு தம்முடன் இந்தியாவுக்கு அழைத்துச் செல்வார் எனவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எதுவுமே நம்பகமாகத் தெரியவில்லை. 

தேர்தல் காலத்தில் கோதபாயவின் மேடையேறியவர் முரளிதரன். மே மாதம் 18ஆம் திகதியே (முள்ளிவாய்க்கால் இறுதிநாள்) தமது வாழ்வின் மகிழ்ச்சியான நாள் என்று பகிரங்கமாகக் கூறி சிங்களவர்களின் கைதட்டலைப் பெற்றவர். இப்படியாகக் கூறிய தம்மை வடக்கு மக்கள் ஏற்பார்களா என்ற உளவியற் சிக்கலில் முரளிதரன் சிக்குண்டுள்ளதாக காதோடு காதாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது அரசின் பிரதான பதவிகளுக்கு முன்னாள் படைத்தளபதிகளை நியமித்துவரும் கோதபாய நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக படையினருக்கென விசேட வர்த்தமானி அறிவித்தலையும் விடுத்துள்ளார். படிப்படியாக இராணுவ ஆட்சியேற்படுவதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சில ஊடகங்கள் வரிகளுக்கிடையே பவ்;வியமாக இதனை எடுத்துக்கூறி வருகின்றன.

இந்த அச்சத்தை நீக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, இராணுவ ஆட்சிக்கு இடமேயில்லை என்று அடித்துக் கூறியுள்ளார்.

இவ்விடத்தில் ஒருசில கேள்விகள் உண்டு. கோதபாயவும், அவரது இராணுவ சகபாடிகளும் அரசின் கடிவாளக் கதிரைகளில் அமர்ந்த பின்னர் சிலர் ஏன் நாட்டைவிட்டு ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள காவற்துறை அதிகாரிகளுமே தப்பியோடுகின்றனர். சஜித்துக்கு வலதுகரமாகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் இலண்டனுக்குப் புறப்பட ஆயத்தமாகிறார்.

முன்னைய அரசாங்கக் காலத்தில் ஊழல் மற்றும் குற்றவியல் விசாரணைக்குப் பொறுப்பாகவிருந்த பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசந்த தனது பிள்ளைகளுடன் சுவிஸ் பறந்துவிட்டார். இதே விசாரணைப் பிரிவிலிருந்த 700 வரையான காவற்துறையினர் நாட்டைவிட்டு வெளியேற முடியாது தடைசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரி நிசந்த சுவிஸ் செல்ல அனுமதி வழங்கிய கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக பணியாளர் ஒருவர் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வீதியில் இறக்கப்பட்டுள்ளார். இதனையிட்டு இலங்கை அரசிடம் சுவிஸ் அரசு தனது கண்டனத்தை நேரடியாகத் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் இதனைச் செய்திருப்பதாக அரச தரப்பினர் வழக்கம்போல கதையளக்கின்றனர்.

இதற்கிடையில், சிறுபான்மையின மக்களுக்கு ஜனாதிபதி கோதபாய மறைமுக எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு தாம் இந்தியா புறப்படும் முன்னர் அவர் வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதி கீழே:

'இலங்கையின் பெரும்பான்மை இன மக்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விசயங்களை சிறுபான்மையினர் செய்யக்கூடாது. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் பெரும்பான்மைச் சமூகம் எதிர்வினையாற்றும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்பது கோதபாயவின் மறைமுக எச்சரிக்கை.

நன்றாகப் புரிகிறது! ஆட்சிக்கு வந்த முதல் பத்து நாட்களுக்குள் வந்துள்ள முதல் எச்சரிக்கை இது. வெள்ளை வானும் வெளியே புறப்பட்டு விட்டதல்லவா?

ஷநந்திக்கடல்| புகழ் கமல் குணரட்ண சொன்ன இராணுவ ஆட்சிக்கு இடமில்லை என்பதானதை, இராணுவத்தினரின் ஆட்சிக்கு இடமில்லை என்று எவ்வாறு கருத முடியும்? முதல் பத்து நாட்களும் காட்டும் வழித்தடம் எது?

No comments