இலங்கை மீண்டும் ஊடக அச்சுறுத்தலுள்?

ஆட்சி மாற்றதின் பின்னராக ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசி ஊடாகவும், வேறு விதத்திலும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமைப்பின் தலைவர் சத்துரங்க அல்விஸ் தெரிவிக்கின்றார்.
நியூஸ் ஹப் நிறுவனத்தை பொலிஸார் சோதனையிட்டமை, த லீடர் நிறுவனத்தின் ஊடகவியலாளரிடம் விசாரணை நடத்தியமை மற்றும் சுயாதீனு இணையத்தள பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தியமை போன்றவற்றை சத்துரங்க அல்விஸ் நினைவூட்டினார்.
அத்துடன், மேலும் சில ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கான தயார் நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையிலேயே சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும் சத்துரங்க அல்விஸ் நினைவூட்டினார்.
அரசாங்க ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள், இணையத்தள ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என அனைவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இராஜதந்திர ரீதியிலான அதிகாரியொருவரே கடத்தப்பட்டுள்ள பின்னணியில், சாதாரண ஊடகவியலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமைப்பின் தலைவர் சத்துரங்க அல்விஸ் தெரிவிக்கின்றார்.

No comments