பெண் மருத்துவர் கொடூர கொலை; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய நாட்டையே உலுக்கியுள்ளது.

26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அண்மையில் காணாமல் போன அவர் ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சி.சி.ரி.வி. பதிவுகளை வைத்து குற்றவாளிகளை பொலிஸார் தேடி வந்தனர். அதன்படி லொறி சாரதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (01) இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரியங்காவின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதால் அவ்விடத்தில் நிற்க முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்ன கேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், போதை கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர்.

பின்னர் லொறியினுள் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின்னர் பிரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லொறியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மஹ்புப்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments