கோத்தாவை கைவிடச்சந்தர்ப்பம்:தொண்டமானிற்கு அழைப்பு!


சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை பட்டப்பகலிலேயே படு குழிக்குள் விழும் வகையில் அரசியல் தீர்மானம் எடுத்துள்ளது. இதே வழியில் ஆறுமுகன் தொண்டமான் பயணிப்பாராயின் இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் காணாமல்போய்விடும்.' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களால் துரோகிகளாக பார்க்கப்படுகின்ற கருணா, பிள்ளையான் போன்றோர் அங்கம் வகிக்கும் அணியில் ஆறுமுகன் தொண்டமானும் இணைந்துள்ளதால் அவரின் கட்சி சகாக்களே கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து தான் எடுத்துள்ள முடிவை சமூகத்தின் நலன்கருதி அவர் மீள்பரிசீலனை செய்யவேண்டும். எனவும் வேலுகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

தனிநபரின் ஆதிக்கத்தால் முக்கியமான தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். அதுமட்டுமல்ல தனிநபருக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலேயே தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இலங்கை, இந்திய காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதன் நோக்கமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

இவ்வாறு அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொள்கை அரசியலை புறந்தள்ளிவிட்டு, சந்தர்ப்பவாத அரசியலுக்கே முன்னுரிமை வழங்கிவருகின்றது. அந்தகாலத்தில் மக்கள் மத்தியில் அரசியல் ஞானம் இருக்கவில்லை. இதனால், இலகுவில் மாற்றப்பட்டனர்.

ஆனால், இன்று நிலைமை அவ்வாறு அல்ல. மலையக மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. எமது இளைஞர்கள் சிறந்த அரசியல் ஞானத்துடன் இருக்கின்றனர். வரலாற்றில் இழைக்கப்பட்ட தவறுகளை, துரோகங்களை அடையாளங்கண்டு, அவற்றை சமூகமயப்படுத்தி வருகின்றனர்.

எனவே, எங்கள் தாத்தா அதை செய்தார், இதை செய்தார் என கூறிக்கொண்டு, மக்கள் கோரிக்கையை புறந்தள்ளி, இனியும் சந்தர்ப்பாத அரசியலை ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுப்பாரானால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் காணாமல்போய்விடும். சிறப்பான தலைமைத்துவம் இன்மையால் சுதந்திரக்கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை சிறந்த படிப்பினையாக அக்கட்சி காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments