நோக்கதின் பின்னணியை பார்க்கவேண்டும்:கணேஷ்


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய கட்சியென பார்க்காது அவரை தனி மனிதனாக நோக்கி தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் கோரியுள்ளார்.

அத்துடன் தேர்தலை பகிஷ்கரிக்க கோரும் கட்சியினை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் கட்சியொன்று ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்குமாறு துண்டுபிரசுரம் யாழ்ப்பாணத்தில் விநியோகித்துள்ளது. உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன என்பதை தமிழ் மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அத்துடன் 2005 ஜனாதிபதி தேர்தலினை வடக்கு கிழக்கு மக்கள் நிராகரித்ததன் பின்னான நிலைமையினை உங்களுக்கு ஞாபகமிருக்கும். நிராகரிக்கக்கூறும் கட்சியினர் அடுத்து ஐந்து வருடத்துக்கு அடகு வைத்துவிட்டு அதன் தலைமை நாட்டில் இருக்குமோ என்பது தெரியாது. எனினும் அடகு வைக்கப்பட்ட தமிழ் மக்களே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும். எனவே நிராகரிக்கும் கட்சியை மக்கள் நிராகரித்து நல்லதொரு பாடத்தை புகட்ட முன்வர வேண்டும்.
இது இவ்வாறிருக்க மற்றும் ஓரிரு தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை விரும்பியவாறு வாக்களிக்குமாறு கோருகின்றது. ஒரு கட்சி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
கட்சி மக்கள் நலன்சார்ந்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் மக்களை பார்த்து உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என விட்டுவிடுவது கட்சிக்கு அழகு அல்ல. அவ்வாறான கட்சிகளால் தமிழ் மக்களுக்கு எவ்வாறு தலைமை தாங்க முடியுமென மக்களே நீங்களே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
தமிழ் மக்களாகி நாம் தற்போது இருக்கும் பிரச்சினையை அதிகரிக்க இடமளிக்க முடியாது. அதுபோல் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இதன் அடிப்படையில் வெற்றிபெறக்கூடியவரில் சஜித் பிரேமதாஸவே பொருத்தமானவர்.
இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் சஜித்தை போல் யதார்த்தமாக பேசி செயற்படும் ஒருவரை இழக்க நேரிடும். மீண்டும் அவ்வாறான ஒருவர் வர 10 அல்லது 15 வருடங்கள் கிடைக்கும். எனவே கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை ஜக்கியதேசிய கட்சியை சார்ந்தவர் என பார்க்காது தனி மனிதனாக நோக்கி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
எனவே தமிழ் மக்கள் தேர்தலை நிராகரிப்போரை நிராகரித்தும் விரும்பியவரை வாக்களிக்குமாறு கோருவோரை புறம்தள்ளியும் தேர்தலில் அன்னபட்சிக்கு வாக்களிக்குமாறு கோருகின்றேன்.

No comments