இமாலய வியப்பு "பிரபாகரம்" - நேரு குணரட்ணம்

இன்று ஈழத்தமிழினம் ஒரு பெரும் வரலாற்றுச் சவாலுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இலங்கைத்தீவின் தற்போதைய நிலை அபாயகரமான எதிர்காலத்தை சுட்டி நிற்கிறது. அதை முழுமையான புரிதலுக்கு உட்படுத்துவதே பெரும் சவாலாக அதற்கு எழுந்து நிற்கிறது. இந்த நெருப்பாற்றை கடந்து அழைத்துச் செல்வதற்கான ஒரு தலைமை அற்ற நிலையில், கூட்டுப் பொறுப்பினூடாவாவது அதைச் சாதிப்பதானால், படிப்பினைகள் முதன்மைபெறும் நிலையில், தமிழ்த் தேசியத்தலைமையின் 50ஆவது அகவைப் பூர்தியை முன்னிட்டு, ஈரோஸ் அமைப்பின் தலைவரும், பின்நாளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினருமான, க. வே. பாலகுமாரன் அவர்கள் 2004இல் எழுதிய சிறப்பு ஆய்வை, "இமாலய வியப்பு", பிரபாகரத்தின் ஒரு அங்கமாக எடுத்து வருகின்றேன். இதில் அவர் தொட்டுள்ள பல புள்ளிகள் மேலும் ஆழமான ஆய்விற்கு உட்படுத்த வேண்டியவை. அவற்றை தொடர்ந்தும் பிரபாகரத்தின் தொடர்ச்சியில் தரிசிப்போம்.

- க.வே பாலகுமாரன் -
பிரபாகரம் - பகுதி 2
இமாலய வியப்பு

எல்லா வகையிலும் எம்மால் எட்டமுடியாத உயரத்திலுள்ளவர் பற்றி, எழுதுவதற்கு இப்படியொரு வாய்ப்புக் கிட்டியமை எனக்கு எதிர்பாராதது. ஆனால் இவ்வாறு எழுதுவதன் மூலமாவது, அவரை ஏதோவொரு வகையில் எட்டவோ, தொடவோ முடிந்தது பற்றி எனக்குப் பெரு மகிழ்ச்சி. இவற்றினைவிட நன்றியை, பிறர் நயப்பைக்கூட எதிர்பார்க்காத அவருக்கு, இப்படியாவது எமது பெரு நன்றியை பேரன்பைச் செலுத்த முடிந்ததே என்கிற ஆறுதலும் கிட்டுகின்றது.

ஆனால் வாய்ப்புக் கிடைத்தாலும் எதனை, எப்படியெழுதுவது? எழுதுவோர்கள் அனைவருமே அவரை முழுமையாக உணர்ந்தவர்கள் என்றாகுமா? எந்தவொரு தத்துவத்திற்கும், வடிவத்திற்கும், விளக்கத்திற்கும், இலக்கணத்திற்கும் உள்ளடக்க முடியாத மனிதர் பற்றி எப்படியெழுதுவது? எந்தவொரு வரலாற்றின் தீர்க்கமான கட்டங்களிலும், எந்தவொரு எதிர்பார்ப்பிற்கும், ஊகத்திற்கும், தோல்வியையும் எதிரிக்கு எப்பொழுதும் அதிர்ச்சியையும், நண்பருக்கு எப்பொழுதும் வியப்பையும், இடைவிடாது பிறப்பிக்கின்றவர் பற்றி எவராலும் எழுத முடியுமா? ஆகவே எழுதுவது என்பது பயனற்ற முயற்சிதான். ஆயினும் எழுத முடியாது என்பது பற்றியாவது எழுத முடிகின்றதே என்பது தான் எமது வெளிப்பாடாக அமைகின்றது. அதேவேளை இவ்வளவிற்கும் வியப்பூட்டுகிற பிரபாகரன், அதேவேளை எந்தளவிற்கு கீழிறங்கி சகமனிதர்களோடு, போராளிகளோடு, முதியவர்களோடு, நண்பர்களோடு, சிறுபிள்ளைகளோடு, இயல்பாக அவர்கள் தள்ளிப்போகாமல் பார்த்து தன்னோடு அரவணைத்து, அவர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணமும், தாழ்வுணர்ச்சியடையாமலும், அதேவேளை அவர்கள் தங்களை இப்பெரும் தலைவன் எவ்வளவு தூரம் மதிக்கின்றான், என்பதன் வழி தங்கள் மதிப்பினை உணர்கின்ற வகையிலும், பெறுகின்ற உளவியல் ஊக்க பரிமாணத்தினை எப்படி விளக்குவது? ஆனால் விளக்கத்தான் வேண்டுமென்பதற்காகவே இங்கே எழுத நேரிடுகிறது.

எனது வியப்பினை, உள்ளத்தில் கிழந்தெழும் உயரிய சிந்தனையோட்டத்தினை பெருமிதத்தின் பூரிப்பினை இப்பொழுது பட்டியலிட முனைகின்றேன். கீழ்மையடைந்து, அடிமை வாழ்வை வாழ்கின்றோமே என்பதை மறந்து, சிதைந்து, சீரழிந்து, உதிரிகளாக பிளவுண்ட ஒரு தேசிய இனத்தினை, எவ்வாறு அவர் ஒழுங்குபடுத்தினார்? ஒருமுகப்படுத்தி ஒன்றிணைத்தார்? இணைந்தவொரு ஆற்றல்மிக்க அரசியல், இராணுவ, இராசதந்திர வல்லமை நிறைந்த அணியாக்கி, அதனை சர்வதேச முன்றலிலே எவ்வாறு அவர் முன்னிறுத்தினார்? இங்கேதான் எனது வியப்பு விரிகின்றது. ஒரு தேசிய இனத்தின் இணைக்கும் பண்புகளே எம்மைப் பிரித்தன. இறைநெறியோ, மொழிப்பற்றோ, வதிவிட வாழ்வுரிமையோ எம்மை இணைக்கவில்லை. மாறாக பிரதேசவாதம் எம்மைப் பிரித்தன. மதம் எம்மை மாற்றானாக்கியது. இதன் விளைவென்ன? 1970களில் தமிழன் கதை முடிந்த கதையென்றானது. தப்பித்தலே, தாயகம் விட்டுப் புலம்பெயர்வதே இறுதிவழியென்றானது. தமிழன் எனச் சொல்வதே இழிவானது. இந்நிலை நீடித்திருந்தால் என்னவாயிருக்கும்? உலகின் அழிந்துபடுகிற மொழியாக தமிழும், அழிந்துபடுகிற இனமானத் தமிழினமும் ஜ.நாவால் பிரகடனப்படுத்தப்படும் நிலையல்லவா தோன்றியிருக்கும்.

இக்கட்டத்தில் தான் பிரபாகரன் அவர்களின் வருகை நிகழ்கின்றது. அவர் மட்டுமல்ல இன்னும் பலரினதும் வருகையும் நிகழ்ந்தது. ஆனால் வரலாறு வழங்கிய வாய்ப்பினை அவர் ஒருவரால் மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. ஏனையோர் பின்வாங்கியதும், பழைய நிலைக்குச் சென்றதுவும், அதற்குக் காரணங்கள் தேடுவதில் இன்றளவும் காலம் கழிப்பதுவும் எவ்வளவு நகைப்பிற்குரிய விடயம். இன்று பிரபாகரன் அவர்கள் தமது பணி மூலம் தமிழ்த் தேசிய இனத்தினை, ஒரு கட்டுக்கோப்பான தனது விடுதலைக்காக பல்வேறு தளங்களில் போராடுகின்ற நவீன தேசியங்களின் பண்புகள் பொதிந்த ஒரு முன்னணி அணியாக்கிவிட்டார். அதாவது அவரே தமிழ்த் தேசிய இனத்தினை இணைக்கிற, காக்கிற மாபெரும் சக்தியாகிற அதேவேளை, அவரே அதன்   உருவமுமாகிவிட்டார். இதுவொரு வரலாற்றின் புதிய பரிமாணம். தலைவர்கள் தேசியப்
போராட்டத்தினை முன்னெடுத்தமை பற்றி அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கோ தலைவனே தேசியத்தின் வடிவமாகிவிட்டதைக் காண்கின்றோம். இதனாலே அவரைத் தேசியத்தின் தலைவன் என்கின்றோம்.

இதற்கான அவரது உழைப்பை, சிந்தனையை, ஏற்பாடுகளை, அவரை உயிரென மதித்து செயற்ப்பட்டோர் சிந்திய குருதியை, பட்ட துயரை எவராலும் மறக்க முடியுமா? இன்று பிறநாட்டு அறிஞர், ஆர்வலர் என பல்லோரும் அவர் முன்னே பணிந்து அவரைக் காண்பதே பெரும் பேறென நினைத்து மகிழும் நிலை தோன்றியிருக்கின்றது. இதற்கொரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. "மனிதம் தளிர்க்க வேண்டும். மானுடம் பிழைக்க வேண்டும்" என்று முனைந்த வித்தகன் கார்ல் மாக்சின் சமூக வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஆண்டான், அடிமை சமூகக் காலகட்டத்திலே தோன்றிய அடிமைத் தளையை அறுக்க ஸ்பாட்டகஸ் போன்றோர் தோற்றிய போராட்டத்தின் இன்றைய தொடர்ச்சியாக பிரபாகரன் காணப்படுகின்றார். மனிதகுல விடுதலை வரலாற்றின் இன்றைய இணைப்புச் சங்கிலி அவரே.

எனது அடுத்த இமால வியப்பு என்னவென்றால், அவர் இதுவரை காலமும் பயன்படுத்திய அனைத்து இராணுவ, அரசியல், இராசதந்திர உத்திகள், அணுகுமுறைகள் எல்லாமே உள்ளடங்கிய போரியல் சிந்தனை முறை பற்றியது. எங்கிருந்து இத்தனை ஆற்றல்களையும் அவர் பெற்றார்? அலுப்புச் சலிப்பற்று, ஓய்வற்று, இடைவிடாது சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் அவர் மன உலகம் பற்றியே நான் பெரிதும் வியக்கின்றேன். அவர் மனஉலகின் பல்வேறு தளங்களிலே சமகாலத்திலே பல்வேறு அரசியல் போராட்டங்கள், இராணுவப் போர்கள், இராசதந்திரச் செயற்பாடுகள் எல்லாமே தனித்தனியாக நிகழ்த்தப்படுவதாக நான் உணர்கின்றேன். இத்தகைய அதி அற்புத ஆற்றல்கள் கைவரப் பெற்றவர் என்று சொல்வதைவிட, அவ்வாற்றல்களை அவர் தனக்குள் கிளர்ந்தெழ வைக்கின்றார் என்பதே பொருத்தமானது. இவ்வாறாகும் அவர், பெரு மனிதராக ஏனையோருக்கு தான் தோன்றிவிடக்கூடாது என்பதற்காக, இயல்பு வாழ்வைப் பேணுகின்ற விதமே இன்னொரு இமாலய வியப்பிற்குரிய விடயம். இச் சமநிலையைப் பேண அவரிடம் எவ்வளவு மனத்திடம் வேண்டும். இன்னொரு அதிசயம் என்னவென்றால், அவரிடம் காணப்படும் அபாரமான எளிமை, மிக முதிர்ந்த மனநிலையையும், மிக இளைய மனநிலையையும் சமகாலத்திலே ஒருவர் பெணுகின்றார் என்பது எம்மால் நினைத்தும் பார்க்க முடியாத விடயம். ஏனைய பிற மனிதருக்கு அவர் புகட்டும் பாடம், வரிகளில் அடக்கமுடியாதவை.    

இங்கே தான் அவர்வழி வரலாற்றுத்தாய் உணர்த்தும் அரிய செய்தி மனிதருக்காக  வெளிப்படுகின்றது. மனிதரிடை மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை உணர்வது, அதனை  வெளிப்படுத்துவது என்பது தான் அவர் வழிநிகழ்வதாக உணர்கின்றேன். நவீன அறிவுலகத்தின் அதி அற்புத மனிதப்பிறவியாக அவரை நான் உணர்கின்றேன். "உன்னையே நீ அறிவாய்" என்பார்கள். அவர் தன்னையே தான் அறிந்து, தன்னையே தான், நம்புகின்றார். அவர், "இயற்கையிடமோ, மனிதனிடமோ தோல்வியை ஒப்புக்கொள்ளப்போவதில்லை." ஏனெனில் அவர் தனது இன்றைய நிலையை அடைவதற்கு "எவருக்குமே கடமைப்பட்டவர்" அல்லர். அவ்வாறே அவர் உருவாக்கிய அணியே இன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்து தமிழினம் தலைநிமிர்ந்து, தாழ்வுச் சிக்கல் அகன்று, இனமானம் பெற்று, வாழ வழிவகுத்துக் கொண்டிருப்தை நாம் காண்கின்றோம். அதற்காக அந்தப் போராளிகள் அணியே தேசியத் தலைவருக்கு பெரு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு போராளிக்குள்ளும் மறைந்திருக்கும் அரிய ஆற்றலை, அவனோ, அவளோ உணர வழிவகுத்த திறன் அவரிடமே இருந்தது.

மனித குலத்திற்கே பிரபாகரன் மூலம் சொலலப்படும் பெறுமானம்மிக்க அரசியல் உணர்த்துகையை, இன்றைய நவீன ஆய்வாளர் ஆய்வுகளில் காணமுயல்கின்றார்கள். மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் அரிய ஆக்கத்திறனை, ஆற்றலை, புதிதாக உலகைப் படைக்கும் ஆற்றலை அவன் உணராதிருக்கின்றான். அதை அவன் உணர்ந்தால் அவனை வெல்ல எவராலும் முடியாது என்கிற பேருண்மையை, பிரபாகரன் ஆய்வுகூட ஆய்வுகளின் வழியன்றி, போராட்ட வழிநின்று நிரூபித்தவிதம்,  நிச்சியமாக அறிவியலாளர் ஆய்வுக்குப் பின்னொரு காலம் முதன்மைப் பொருளாக அமையப்போகிறது. எனவே தான் இன்று அவருக்கு அருகாமையில் இருக்க, அவரைக்காண, உணர எம்மக்கள் அலையாக மோதுகின்றார்கள். இது தரிசனம் பெறும் காட்சியல்ல. அவர்மூலம் பரவும் பேராற்றலின் பேரொளி வட்டத்தின் கதிர்வீச்சிற்குட்படுவதன் தாக்கம் தம்மையும் உயிர்ப்பிக்கும் என்பதன் வெளிப்பாடே இது. எனவே தான் இன்றைய நூற்றாண்டின் வரலாற்றின் விளைபொருள் அவரே ஆகின்றார்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் அவ்வவ் காலகட்டத்திற்கேற்ப மனித விடுதலையைத் தொடர்வதற்காக உருவாகிய தலைவர்களை நாம் கண்டுள்ளோம். அவ்வவ் காலகட்டங்களில் உள்ள சூழ்நிலை இத்தகைய விடுதலையை யாசிப்பதாக உந்தித் தள்ளுவதாக அமைவதையும் பார்க்கின்றோம். ஆனால் தேசியத்தலைவரின் காலகட்டத்தினை நோக்கும் போது எனக்கு உண்மையில் ஏற்படுவது இமாலய வியப்புத்தான். நவீன போரியல் வளர்ந்த காலகட்டத்திலே கரந்துறைப் போராளியாக மிகச் சிறிய அணியைத் தொடக்கினார். இதுவே பல நூற்றாண்டுக்கால பின்தங்கிய போருக்தி. பனிப்போர் காலகட்டத்து வல்லரசின் பிராந்திய தலைமை நாடான இந்தியாவோடு மோதவும் அவர்
முடிவெடுத்தார். பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே முதலாளியம்   கொடிகட்டிப் பறந்த காலகட்டத்திலே அனைத்து நாடுகளுக்கும் எதிராகவே மறைமுகமாக அவர்  பெரும் போரை எதிர்கொண்டு நடாத்தினார்.

இங்கே கவனிக்கபடவேண்டிய விடயம் என்னவென்றால் நவீன போரியலின் வளர்ச்சி, நவீன அறிவியலின் உச்ச வளர்ச்சி, தொடர்பாடல்த் துறையால் உலகம் கிராமமாகிவிட்ட நிலை, உலக மயமாக்கல் உச்சக்கட்டமாக அரங்கேறிய வேளை, தனிமனித மேம்பாடே தலையாய விதியாகிய வேளை, இந்நிலையில் இத்தகைய போக்குகளின் தாக்கத்தினையும் தாங்கி அதனையெதிர்த்துப் போராடும் மனிதரின் தாங்கு சக்தியின் ஆற்றலே அவரை பெருத்த சிந்தனையாளனாக்குகிறது. எனவே தான் கூறுகின்றோம், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலை மனிதர் அவர். இவரது இப்புதிய அரசியல், இராணுவப் பாங்கு இந்த நூற்றாண்டினதும் இனிப் பின்வரும் நூற்றாண்டினதும் விடுதலை வேண்டுவோருக்கான வழிகாட்டி.

எனது வியப்புக்களோ எல்லை அற்றவை. இவற்றினை இங்கே சிறப்பித்து எழுதியமைக்கு பிரதான நோக்கம், மேம்பாடடைந்த ஆக்கத்திறன் மிக்க போரற்ற இசைவடைந்த வாழ்வினைப் பெறமுயலும் மனித குலத்திற்கு அவரது சிந்தனைகள் எவ்வளவு பயன்படும் என்பதை உணர்த்தவேயாகும். மிகப்பெரும் பேராற்றலின் வித்தகனாகத் தோன்றிய அவர்,  அமைதியின் எளிமையின் ஆக்கத்திறனின் அறிவியல் வாழ்வின் குறியீடுமாகின்றார். சுவீடன் நாட்டு உப்சலா பல்கலைக் கழகத்தின் பெரும் நூலகத்தின் வாயிலிலே பொறிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளிவை:

"To Think freely is Great
To think correctly is Greater"

சுதந்திரமாக சிந்தித்தலென்பதே மிகப்பெரிய விடயம்தான். ஆனால் மிகச் சரியாக சிந்திப்பதென்பது அதனையும்விட பாரிய விடயம். இதனையே எமது தேசியத் தலைவருக்கு நாம் எமது பேரன்பின் வரிவடிவமாகச் சூட்டுகின்றோம்.


No comments