கோத்தாவின் விஞ்ஞாபனம் ஏமாற்றத்தை தந்துள்ளது- சிவிகே

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை சார்ந்த விடயம் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ புதிய அரசியலமைப்பு பற்றியோ குறிப்பிடப்படாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவாராக இருந்தால் அவர் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மட்டுமே செயற்படுவார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது அல்ல தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த போதே தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் தான் ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவேன் என்று கூறியிருக்கின்றார்.ஆகவே அந்த அடிப்படையில்தான் அவருடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றதோ என்று புரியவில்லை.

எனினும் தாம் ஜனாதிபதியானால் நிர்வாக விடயங்களை மட்டுமே கவனிப்பேன் அரசியல் விடயங்களை மகிந்த ராஜபக்ஷவே கவனிப்பார் என்றும் கூறியுள்ளார்.ஆகவே சிலவற்றை வெளிப்படையாக கூறாமல் தவிர்த்துக் கொண்டாரா என்று அவருக்குத்தான் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments