கோத்தா வரமுன்னே தொடங்கியது நாடகம்?


கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பாக வீரகேசரி நிறுவனத்தின் யாழ்ப்பாண அலுவலகச் செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு காவல்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை இவ்விசாரணை இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற்படுவதாக வெளி வந்த செய்தி தொடர்பாகவே சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

ஆனால் சோபிதன் கடந்த மாதம் இரண்டாம் திகதி விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்துமாறும் அவருடைய சட்டத்தரணி காவல்துறை தலைமை அலுவலகத்திடம் கேட்டிருந்தார்.

எனினும் விசாரணைக்குரிய திகதியை மாற்றித் தர முடியுமெனவும் விசாரணைக்கு பொழும்புக்கே வர வேண்டுமென்றும் காவல்துறை தலைமையக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதனால் சோபிதன் இன்று கொழும்புக்கு தனது சட்டத்தரணியோடு விசாரணைக்குச் சென்றிருந்;தார். சுமார் இரண்டரை மணித்தியாளம் விசாரணை இடம்பெற்றது.

கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மரிய சுரேஸ் ஈஸ்வரி யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மரிய சுரேஸ் ஈஸ்வரி யாழ் ஊடக அமையத்தில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக டக்களஸ் தேவானந்தா இலங்கைக் குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறையிட்டுள்ளார்.

இதனால் மரிய சுரேஸ் ஈஸ்வரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணையின் தொடர்ச்சியாகவே சோபிதன் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

No comments