வேட்புமனு ஏற்பு:ஏற்பாடுகள் தயார்?


ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 7 ஆம் திகதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்படவிருப்பதால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1200 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்தோடு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுதுறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலும் 493 தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் கண்காணிப்பதற்காக இவ்வாறு தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக கிழக்கு மாகாண மற்றும் பொலிஸ் வாகனங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று பொலிஸ் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் செயலகங்களுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக அஷோக தர்மசேனவும், அவற்றுக்கு பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் சரத் எ சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தலுடன் தொடர்புடைய இரு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பதாதையொன்று தொடர்பாக இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2 ஆம் திகதி மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரது புகைப்படத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.
இவை தவிர தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இம் மாதம் முதலாம் திகதி நரஹேன்பிட்டி மற்றும் வெலிகட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு இரு முறைப்பாடுகளும், 2 ஆம் திகதி உடுதும்பர பிரதேசத்தில் ஒரு முறைப்பாடும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments