எவரும் சிங்கள மக்களின் வாக்குகளில் வெற்றி பெற முடியாது


இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எந்தவொரு ஜனாதிபதி வேட்பாட்பாளரும் சிங்கள வாக்குகளால் மட்டும் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக மக்களுக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தங்களின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கியிருந்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தொடர்பான கேள்வி எழுந்திருந்தது.

தற்போது, ஐக்கிய தேசியக் கட்சி தங்களது வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ள நிலையில், கோட்டாவுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட முடியுமா- முடியாதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

அவரது குடியுரிமை பிரச்சினையை அடுத்து, மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த சந்தேகத்தால், அந்தத் தரப்பிலிருந்து யார் வேட்பாளராக களமிறங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதான வேட்பாளர்கள் இருவரும் தற்போது அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார்கள்.

உண்மையில், இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை பிரதானக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் 50 வீதத்திற்கும் அதிகமாக வாக்கினைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது நன்றாகத் தெரிகிறது.

இதற்காகவே, அந்தத் தரப்பினர் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

எவ்வாறாயினும், இந்த நாட்டின் தேர்தல் முறைமைக்கு இணங்க, எந்தவொரு வேட்பாளருக்கும் சிங்கள வாக்குகளால் மட்டும் ஜனாதிபதியாக முடியாது.

இலங்கையின் தேர்தல் முறைமை, அனைத்து இன மக்களும் ஐக்கியமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, எந்தவொரு வேட்பாளரும் சிங்கள வாக்குகளால் மட்டும் வெற்றிபெற முடியாது என்பதுதான் உண்மையாகும்” என மேலும் தெரிவித்தார்.

No comments