இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கோத்தா பக்கம் பாய்ந்தனர்

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழில் இயங்கும் சமூக மேம்பாட்டு இணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அந்த இணையத்தின் தலைவர் மற்றும் வலி. மேற்குப் பிரதேச சபையில் சுயேட்சைக் குழு உறுப்பினர்களாக இருக்கின்ற மேற்படி இணையத்தின் இரண்டு உறுப்பினர்களும் நேற்று (23) பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.

இவர்கள், யாழ். கே.கே.எஸ். வீதியின் சிவலிங்கப்புளியடிச் சந்தியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து கட்சியின் வட. மாகாண பிரசார இணைப்பாளர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டனர்.

இதன்போது, குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவிக்கையில், “கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நாம் முன்வந்திருந்த போதும் எந்தவொரு தமிழ் கட்சிகளும் எங்களுக்கான இட ஒதுக்கீடுகளைத் தரவில்லை.

அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும் தங்கள் உறவுகளையும் தெரிவு செய்து நியமித்திருந்தனர். இதனால் நாங்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறோம்.

எமது மக்களின் கஷ்ட, துன்பங்கள் தொடர்பாக யாருமே அக்கறையுடன் செயற்படவில்லை. ஆகையினால் அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கில் நாம் பல தரப்புக்களுடன் கலந்துரையாடி வந்தோம்.

இதற்கமைய பொதுஜன பெரமுன எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் கூடிய நம்பிக்கையின் நிமித்தம் நாம் அவர்களுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

No comments