மீண்டும் கைது நடவடிக்கைகளில் இராணுவம்?


யாழ்.நகரப்பகுதியில் இராணுவ வாகனத்தில் பெண்கள் இருவர் கதற கதற கொண்டு செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

எனினும் மானிப்பாய் லோட்டன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலையில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் நேற்று  ஞாயிற்று;ககிழமை சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதிகாலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினரும் போலீசாரும் குறித்த வீட்டை சுற்றிவளைத்து அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அந்த வீட்டில் தாயாரும் மகளும் வேறொரு மகனும் இருந்ததாகவும், குடும்பத்தலைவர் கொழும்புக்கு சென்றிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

பெண் பொலிஸாரும் குறித்த சுற்றிவளைப்புக்கு சென்றிருந்ததாகவும் அவர்களால் வீட்டில் இருந்த பெண்கள் உடற்சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்திய அதிரடிப்படையினரால் வீட்டு வளவிலிருந்ததாக தெரிவித்து 03 துருப்பிடித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த வீட்டிலிருந்த இளைஞன் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட இளைஞர் அதிரடிப்படையினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த இளைஞர் மீது வன்மமான முறையில் பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இவ்வாறு 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல வழக்குகளில் இளைஞர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தால் பொலிஸார் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சட்ட முரணான வகையில் இளைஞர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு கைதான இளைஞனது தாயார் சகோதரியே வாகனத்தில் கதற கதற கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது. 

No comments