நிபந்தகைளுடனேயே சஜித் வேட்பாளராகின்றார்?


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் நிபந்தகைளுடனேயே இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்   நேற்று (24) இரவு இடம்பெற்றது.
இதன்போதே பிரதமர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, கபீர் ஹசிம், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் சமரவிக்ரம ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எனினும், எழுத்துமூல ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் அவரை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சஜித் பிரேமதாசவை  வேட்பாளராக நிறுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளபோதிலும், ரணில் விக்ரமசிங்கவே கட்சியின்  தலைவராகவும், பிரதமராகவும் நீடிப்பார் என்ற எழுத்துமூல உத்தரவாதத்தை சஜித் பிரேமதாசவிடம் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான வாக்குறுதியையும் சஜித் பிரேமதாச வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
நாளை நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments