ஐதேகவின் இறுதிக்கட்ட அரசியல் சமர் உச்சம் தொட்டது!


செயற்குழுவில் இரகசிய வாக்கெடுப்பை நடத்த ரணில் வியூகம் -  நாடாளுமன்ற குழுவையும் கூட்டுமாறு சஜித் தரப்பு விடாப்பிடி!!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு  எதிர்வரும் வியாழக்கிழமை (26) கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் கூடவுள்ளது.

இதன்போது இரகசிய வாக்கெடுப்புமூலம் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றிரவு (22) அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியல்ல, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, வஜீர அபேவர்தன, தயா கமகே உட்பட ரணிலுக்கு ஆதரவான மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக 25 ஆம் திகதி புதன்கிழமையே கட்சி மத்தியசெயற்குழு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சஜித் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே 26 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

91 பேரை அங்கத்தவர்களாக கொண்ட ஐ.தே.க. மத்திய செயற்குழுவில் தற்போது 68 உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். அதில் 48 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இந்நிலையில் தனக்கு விசுவாசமான 23 உறுப்பினர்களை செயற்குழுவுக்கு உள்வாங்குவதற்கு ரணில் முயற்சித்துவருகிறார் என சஜித் தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தாலும் அக்குற்றச்சாட்டை ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் மறுத்துள்ளார்.

No comments