வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட முரளி

கிரிக்கெட்டில் சாதித்த தமிழ் வீரர் என்னும் முறையில் பெருமிதமாகப் பார்க்கப்பட்ட முத்தையா முரளிதரனை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வெறுக்கின்றனர் எனும் போது அவரது நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்பதை நாம் இலகுவில் ஊகித்துவிடலாம். சில நாட்களுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்சவின் நிகழ்வு ஒன்றில் "புலிகள் அழிக்கப்பட்ட நாள்! எனது வாழ்வில் முக்கியமான நாள்" என்று முரளிதரன் கூறியமை மற்றும் மறுநாள் தனது கருத்தை ஊடகங்கள் திரிபுபடுத்தி விட்டன. புலிகள் பற்றித் தான் பேசவில்லை என்று பல்டி அடித்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முரளி, புலிகளை வைத்து யுத்த முடிவுற்ற நாள் பற்றிக் கூறினாரா? இல்லையா? என்ற வாதத்திற்கு அப்பால் போர் முடிவுற்ற அன்றைய தினத்தை சிங்கள, முஸ்லிம் மக்கள் போன்று மகிழ்ச்சியான நாளாகத் - தருணமாக அவர் கருதினார் என்பதை அன்றைய கோத்தாவின் நிகழ்வில் வெளிப்படுத்தி இருக்கின்றார். அட! இதற்காக முரளியை எதிர்ப்பதா? போர் தொடர்ந்திருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று அவருக்கு சார்பாக - அவரை விரும்பிய ரசிகர்களாக இருக்கக் கூடியவர்கள் கேட்கலாம் - கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதற்குரிய பதில் இது தான்,

இறுதிப்போர் நிறைவுற்ற (2009 மே 18) அன்றைய நாள் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் அவலமான சோகம் நிறைந்த நாளாகவே அமைந்திருந்தது. முரளி மகிழ்ந்த அந்த நாளில் தான் பெரும் தமிழினப் படுகொலைகளும், போர்க்குற்றங்களும் இடம்பெற்றன. அன்றைய தினம் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர், பெண் போராளிகள் வன்புணரப்பட்டனர். அப்படியான ஒருநாளினைத் தான் முரளி தனது வாழ்வின் மகிழ்வான நாளாகக் கருத்தினார். மக்கள் கொல்லப்பட்டதில் அவருக்கு கவலையும் இல்லை. தமிழ் மக்கள் அன்றைய நாளினை எவ்வாறு அனுஷ்டிக்கின்றனர் என்ற அறிவும் அவருக்கு இல்லை. அப்படியிருக்கும் போது விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழத்தான் செய்யும். அதில் தவறில்லை

2013ம் ஆண்டு முன்னாள் பிரித்தானியா பிரதமர் யாழ்ப்பாணம் வந்த போது காணாமல் ஆக்கப்பட்ட மகனைக் கேட்டு தாயும், சகோதரியும் போராடிய போது அவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவரின் சகோதரியான சிறுமியை மிருகத்தனமாக தாக்கினார்கள். இச்சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் "பத்து இருபது பேர் போராடுவதால் குற்றச்சாட்டுக்குள் உண்மையாகி விடாது" எனக் கூறிய முரளி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கண்ணீரை இழிவுபடுத்தினார். அன்றில் இருந்து தான் முரளியை தமிழர்கள் வெறுக்க ஆரம்பித்தனர். அண்மையில் கூட ஜனநாயகத்தை விடச் சாப்பாடு தான் முக்கியம் என்று சிந்தனையற்ற முறையில் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

முரளியின் இத்தகைய சர்ச்சைக்குரிய அறிவற்ற கருத்துக்கள் பலவற்றை சுட்டாக்காட்டிக் கொண்டே இருக்கலாம். ஆனால் முரளியை வெறுக்க, எதிர்க்க - விமர்சிக்க இந்தக் கருத்துக்களே போதுமானதாகும். அதுமட்டுமல்லாது இப்போது கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து கொண்டு வெளியிட்ட கருத்தினால் மீளவும் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் இந்த முரளி. தமிழர்களுக்கு விரோதமாக மட்டும் பேசும் இவரால் தான் பிறந்து வளர்ந்த, தனக்கு அடையாளம் கிடைக்க உதவிய மலையத்திற்காக - மலையக மக்களுக்காக ஒரு வார்த்தையேனும் முரளியினால் இதுவரை சொல்லப்படவில்லை. அவரது தேவை தமிழருக்கு விரோதமாக பேசி பௌத்த பேரினவாதிகளின் ஆதரவைப் பெறுவதேயாகும். அதனைத் தான் சரியாக செய்து கொண்டிருக்கின்றார். எதிர்ப்பு வரும்போது பல்டியடித்து சமாளித்து விடுகின்றார்.

அப்படியான முரளியை தமிழ் மக்கள் முற்றாக வெறுத்து ஒதுக்குவது தான் சரியான முடிவாகும். ஆயினும் முரளியை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு மலையக மக்கள் மீது சேற்றை அள்ளிப் பூசும் பிரதேசவாதச் செயற்பாட்டைச் சிலர் முன்னெடுக்கின்றனர். முரளியை விமர்சித்து எந்தவிதமான சேற்றையும் நாம் அள்ளி வீசலாம். ஆனால் மலையக மக்கள் மீது சேற்றை அள்ளி வீச முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். அந்தச் செயற்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

ஞா.பிரகாஸ்

No comments