கோத்தா வெற்றிக்கு சிங்கள மக்கள் தயார்; தமிழர் ஆதரவும் வேண்டும்!


சிங்கள மக்கள் கோட்டாபயவுக்கு அமோக வெற்றியைக் கொடுக்க தயாராகி விட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தர வேண்டுமென கிளிநொச்சியில் இன்று (29) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போது உள்ள சூழலில் எமது கட்சி வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சிக்கு உள்ளூராட்சி தேர்தலின்படி 51 இலட்சம் வாக்குகள் காணப்படுகின்றன. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 16 இலட்சம் வாக்குகள் உள்ளன.

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து கேட்க உள்ளமையால் அதிகளவான வாக்குகளுடன் அமோக வெற்றியை கோட்டாபய ராஜபக்ஷ பெறுவார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து குறைந்த அளவிலான வாக்குகளையே பெறுவார்கள்.

சிங்கள மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து அமோக வெற்றியை பெற வைக்க தயாராகிவிட்டனர். ஆனாலும் இந்த வெற்றிக்கு தமிழ் மக்களின் பங்கும் உள்ளது. அதனால் உங்களின் ஆதரவினையும் வேண்டுகின்றோம்.

கடந்த கால ஆட்சியில் அபிவிருத்திகளோ, வேலை வாய்ப்புக்களோ கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் நினைத்திருந்தால் சிறந்த ஆட்சியை செய்திருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

No comments